Friday, 15 December 2017

திரு.கோ.விஸ்வநாதன் அவர்களின் உரை ..

வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.கோ.விஸ்வநாதன் புதுச்சேரியில் 12.12.2017 அன்று நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பு உருவாக்கக் கலந்துரையாடல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் :
      புதுவையில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பாரதி, பாரதிதாசன் வாழ்ந்த மண்ணில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் என்பது பேசுவதற்கான மொழி மட்டுமல்ல.  உலகில் தற்போதுள்ள மூத்த மொழிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். 6900 மொழிகள் பேசப்படும் மொழிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30 மொழிகள் மட்டுமே கணிசமாக பேசப்படுவது. இவற்றில் கணிசமான மொழிகள் வழக்கில் இல்லை. மாறாதது தமிழ் மட்டுமே. தமிழர்கள் பல்வேறு விஷயங்களை உணர வேண்டும். இன்று வடசொல் ஆதிக்கம் தமிழில் அதிகம் காணப்படுகிறது. தமிழ்ப் பெயர்களையே காண முடிவதில்லை. 1916ல் தோற்றுவிக்கப்பட்ட தனித் தமிழ் இயக்கம் தேவநேயப் பாவாணர், திரு.வி.க போன்ற தமிழ்ப் பற்றாளர்களை உருவாக்கியது. பலர் தங்கள் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சூரியநாராயண சாஸ்திரி பரிமாற்கலைஞரானார். ராமையா அன்பழகனானார். இதற்கு முக்கிய காரணம் ஜோதிடமும், ஜாதகமும் தான்.
      இன்று ஒரு வார சமஸ்க்ருத வாரம் கொண்டாடப்படுகிறது. அது போல ஒரு நிலைமை தமிழுக்கும் வரலாம். வடநாட்டில் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அவர்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கு ஆங்கிலத்தில் பேசுகிறோம். பெயர்களில் சமஸ்க்ருதம் உள்ளது. நமது குழந்தைகளுக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழ் 3000 ஆண்டு கால பழ்மையான மொழி. ஆனால் இன்றும் பலரும் தவறாகத் தான் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். ஏரிகள் நிரம்பினவா, நிரம்பியதா என்று குழப்பம். இதில் எது சரி எது தவறு என்று பலருக்கும் தெரிவதில்லை. பேரறிஞர் அண்ணா கண்ட இயக்கமே தமிழ் இயக்கம் தான். கட்சியும் அப்படித்தான். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் இன்று 140 கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. காமராசர் காலத்தில் 6000 பள்ளிகள் இருந்தன. ஆனால் இன்று விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பாதிக்கு மேல் ஆங்கிலம் தான். வெளி மாநிலங்களில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. நமக்கு மொழிப்பற்று இல்லை.
      டர்பன் நாட்டில் 7 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பள்ளி இல்லை. இந்தோனேசியாவில் இல்லை. இந்தோனேசியாவில் ஒரு லட்சம் தமிழர்கள் வசித்த போதும் 10,000 என்று தான் கணக்கு காட்டப்படுகிறது. அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள் உண்டு. அருகாமையிலுள்ள ஈழத்தில் கோவிலில் தமிழ் சொல்லித் தருகிறார்கள். 1730யில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 1856-ல் கார்டுவெல் திராவிடம் குறித்து பேசினார். எழுதினர். வெளிநாட்டினர் செய்ததை நாம் செய்யாவிட்டால் எப்படி ?

      ஜோஸ்கா என்றொரு பெயர். ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை. இன்று குடும்பத்தில் பெரியவர்களையும் வயதானவர்களையும் மதிப்பதில்லை. ராஜேந்திர சோழன் 13 நாடுகளை வென்றான். இன்று தமிழை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பணி நம்முன் நிற்கிறது...