Friday, 15 December 2023

 



அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும்

திறனாய்வாளர் க.பஞ்சாங்கத்துடன் ஒரு நேர்காணல்

ஆசிரியர் : பா.இரவிக்குமார்

பக்கங்கள் : 80

விலை : ரூ.120/-

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம், சென்னை 600106

தொடர்புக்கு : 93828 53646 / 88257 67500

--000--

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை பாதிக்கப்பட்ட எளிமையான மக்களுக்காக இயங்குவதன் மூலமே வழங்க முடியும் என்றும், நாளும் நாளும் புதிய தேடலோடு உயர்ந்துகொண்டே இருப்பவர் என்றும்,..  மேலும் வாழ்க்கையை ஒரு புனைவாகவும், இலக்கியத்தை மொழி விளையாட்டாகவும், வரலாற்றை அதிகாரக் கட்டமைப்பாகவும், திறனாய்வை அரசியல் செயல்பாடாகவும் புரிந்து கொள்வதற்கு பஞ்சுவின் எழுத்துக்களே உதவின என்றும்.. வாழ்க்கை ஒரு அபத்தம் என்ற புரிதல் இருக்கிற அதே வேளையில், வரலாற்றில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகிவிட முடியாது என்கிற தெளிவைப் பஞ்சுவின் இந்த நேர்காணல் அளித்திருக்கிறது என்றும்… உச்சத்தில் பஞ்சுவின் நீண்ட பயணத்தில், ஒரு பாதையாகவோ, நிழலாகவோ அல்ல.. ஒரு மணல்துகளாக இருந்திருந்தாலும் அதுவே எனக்குப் பெருமை என்று தனது முன்னுரையில் பேரா.க.பஞ்சு குறித்து பேரா.பா.ரவிக்குமார் கூறுகிறார். பேரா.பஞ்சு குறித்த அவரது ஆழமான புரிதல்  மற்றும் அன்பின் வெளிப்பாடாகவே இவ்வரிகளைக் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பேரா.பஞ்சுவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரது அர்த்தம் பொதிந்த பதில்களுமே இந்நூல்.

குழு சார்ந்து பயணிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு சின்ன வயதில் காணப்பட்ட எதிலும் கலந்து கிடக்கும் போதாமையையும் பற்றாக்குறையையும் எளிதில் கண்டு கொள்ளும் புத்தி, இன்றும் தொடர்வதாகவும், அதிகாரத்தின் சூடு படாமலேயே வளர்ந்த  ஒரு சிறுவன் எதையும் எளிதாகக் கேள்வி கேட்டுவிடக் கூடிய மனநிலை அடைவது இயல்பு போல எந்தக் குழுவிற்குள்ளும் எந்தவொரு சித்தாந்தத்திற்குள்ளும் நிரந்தரமாகத் தங்கவிடாமல் என்னைத் தேடல் நோக்கி விரட்டிக் கொண்டே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சியத்தின் வாடை உங்கள் முதல் நூலான ஒட்டுப்புல் தொடங்கி இன்று வரை நிறைந்திருக்கிறதே என்ற கேள்விக்கு எழுத்துக்களின் வாசிப்பு, எனக்குள் உருவாக்கிய ஆழமான பாதிப்பு, இன்றுவரை எனக்குள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. மானுட சமூகத்திற்குள் நிலவும் வறுமை, அதன் காரணமாகச் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் நடந்தேறும் துக்கங்கள், இழிவுகள் சீரழிவுகள், சின்னத்தனங்கள் எல்லாம் என்னைப் பெரிதும் பாதித்த வண்ணம் இருக்கின்றன என்கிறார். மேலும் மானுட சமூகத்தின் அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம் இந்த வறுமைதான் என்றும் வறுமைக்குக் காரணம் மூலதனக் குவியல்தான் என்று மார்க்சியம் மட்டும்தான் தர்க்கபூர்வமாக விளக்கி நிலைநிறுத்தியது என்பதால் இன்றைக்கும் என் எழுத்தை இயக்கும் ஆதார சக்தியாக இருப்பது மார்க்சிய சித்தாந்தாம் தான் என்று குறிப்பிடுகிறார். உற்பத்தியைக் குவிக்கும் இராட்சச எந்திரங்களின் காலத்திலும் மனித சமுதாயத்தில் கால்வாசிக்கும் மேலானோர் பட்டினியால் கிடந்து மடிகிறார்கள் என்ற உண்மை என்னைப் படுத்துகிறது என்கிற வரிகள் சமூகம் குறித்த இவரது கவலையை பதிவு செய்கிறது.

            மார்க்சிய அமைப்புகளோடு உங்களை இணைத்துக் கொள்ளாதது குறித்துக் குறிப்பிடும் போது எதிலும் போதாமையை எளிதில் கண்டு கொள்ளும் என்னைப் போன்றவர்களால் அமைப்புக்குள் இணைந்து செயல்பட முடியாமல் போய்விடுகிறது. கூடவே அமைப்பிற்குள் இருந்தால்தானா? வெளியே இருந்தும் அந்தச் சித்தாந்தத்திற்கு முடிந்த அளவு துணை நிற்க முடியாதா என்ற எண்ணமும் உருவாகி

--2--

 

விடுகிறது … எந்த அதிகாரத்திற்குள்ளும் இருந்து பழக்கமில்லாத எனக்கு இப்படி வெளியே இருந்து இயங்குவதுதான் வசதியாகப்படுகிறது. சில பேருக்கு அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து போகவும் தெரியும். அதே நேரத்தில் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, கொண்டு செலுத்துவது என்பதும் தெரியும். எனக்கு இந்த இரண்டுமே தெரியாது. இரண்டும் கைகூடி வருகிறவர்கள்தான் அமைப்பிற்குள் தொடர்ந்து இருக்கிறார்கள் என்பது என் அனுமானம் என்கிறார். இந்த வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்வது இயலாது என்பது தான் நடைமுறை எதார்த்தம்.

            திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததை “பெரிய வினையாகப் போய் விட்டது போல் தோன்றுகிறது என்றும், காசும், அதிகாரமும் தனிமனிதர்களை மட்டுமல்ல, ஓர் இயக்கத்தையும் எப்படி சீரழித்துவிடும் என்பத்ற்குத் திமுக இயக்கம் ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிடுகிறார். தேசிய அரசியல் பாசிசத்தை கொண்டு வந்து விடுமா என்ற கேள்விக்கு அதை பொதுமைப்படுத்த முடியாது என்றும் அவ்வாறு வளர்வதற்கு பேரினவாதத்தின் கொடூரமான ஒடுக்குமுறை அரசியல் காரணம் என்றும் ஒடுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் ஓரினம் அழிக்கப்படுவதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள முடியாது என்று பதிலிறுக்கிறார்.

            உயர்கல்வித் துறையில் மாணவர்களைச் சமைக்கும் சமூகத்தின் இன்றியமையாத பங்ககளிப்பை நிகழ்த்த வேண்டிய பேராசிரியர்கள் தேங்கிப் போய் கிடந்ததால் பல்கலைக்கழக நிதிக்குழு புதிய புதிய அறிவுவளத்தை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்கிற நோக்கோடு சம்பளத்தோடு மூன்று ஆண்டுகள் விடுமுறையைக் கொடுத்து முனைவர் பட்டப் படிப்பை தொடர ஊக்கப்படுத்தியதை குறிப்பிட்டு அதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பட்டம் பெற ஓடத் தொடங்கினார் என்கிறார். சிலப்பதிகாரம் ஒரு தொன்மக் கதை என்பதைக் கேள்விப்பட்டு தொன்மம் என்றால் என்ன என்று தேடத் தொடங்கியதையும் அதன் தொடர்ச்சியாக கோட்பாடுகள் குறித்த தேடல் தொடர்ந்தததையும் சொல்கிறார்.

            தமிழ்த்துறைகள் குறித்துக் கூறும் போது காலத்திற்கேற்ப நவீனத்துவத்திற்குள் இன்னும் காலெடுத்து வைக்கவில்லை என்றும் வெறுமனே அந்தந்த மதம் சார்ந்த மடங்களுக்குரிய பண்போடு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகப்பெரிய வேதனை என்றும் மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கோட்பாடுகளுக்கு வறுமை ஏற்படாமல் இருக்க மொழிபெயர்ப்பு கழகங்களை உருவாக்கி, ஆங்கிலத்தில் பிரஞ்சில் உள்ள இலக்கியக் கோட்பாடுகளை மட்டுமல்ல, ஜெர்மன், ஜப்பான், சீனா, துருக்கி, ஸ்பெயின், ஈரான் ஆப்ரிக்கா என்று எல்லா நாட்டிலும் நடந்து கொண்டிருக்கும் இலக்கியக் கோட்பாட்டு நூல்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டுமென்கிறார்.

வள்ளுவரும் பாரதியாரும் தொலைக்காட்சி மூலம் இப்படி தாங்கள் லட்சக்கணக்காகச் சம்பாதிக்கப் பயன்படும் ஒரு மேடைப் பேச்சுக்கான பொருளாகிப் போவோமென்று நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று கடுமையாக மேடைப் பேச்சாளர்களை சாடுகிறார். ஒருவரின் எழுத்து வெகுவாக வாசிக்கப்பட வேண்டும் என்றால் எழுத்திற்கு வெளியே வெகுஜன ஊடகங்களால் பெரிதும் பேசப்படும் ஒருவராக உங்களை உருவாக்கிக் கொள்ளும் பலவிதமான் தந்திரங்களை மிகவும் நுண்ணிய தளத்தில் நிகழ்த்திக் காட்டக் கூடிய சாமார்த்தியம் மிக்கவராக நீங்கள் இருக்க

--3--

வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுகிறார். இவ்வரிகளில் பின்னால் “பொருள் பொதிந்”திருப்பதை புரிந்து கொள்ளலாம். ஒட்டுப்புல் கவிதை நூல் குறித்துக் குறிப்பிடும் போது சரியாக ஓராண்டு பத்துநாள் என்னோடு வாழ்ந்த துணை, ஒரு நாள் மாலையில் ரத்தவாந்தி எடுத்து மடிந்த பிரிவு நெருப்பை கவிதை எழுதி அணைக்க முயன்றேன் என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

கவிதை குறித்த இவரது சொல்லாடல் மிகவும் ரசிக்கத்ததக்கது. அகத்திற்குள் தன்னெழுச்சியாகக் கணநேரச் சிலிர்ப்புப் போல வருகிற வார்த்தைக் கோலங்களை அப்படியே நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுகிற பழக்கம் உடையவன் நான். நம் அகத்தீயை ஊதிப் பொறியைக் கிளப்பக்கூடிய நூலொன்று கிடைத்த வெறியோடு வாசிப்பில் ஈடுபட்டிருக்கும்போது, கழிவறையில் அமர்ந்திருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது, காலை நடையில், குளியலறையில், காலை நேர அரைத் தூக்கத்தில் அல்லது தூங்குவதற்குக் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போது கவிதை வரும். கவிதை ஒரு விசித்திரமான பிறவி. பெரிதும் அது அக உலகப் பயணத்தில் பிறப்பெடுப்பது என்று மிகச் சரியாக குறிப்பிடுகிறார். பலரின் கவிதை உருவான அனுபவம் அப்படியாகத் தான் இருக்கிறது.

பாரதியார் குறித்த இந்துத்துவா பார்வை குறித்துச் சொல்லும் போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உச்சபட்சத் தந்திரங்களோடும் பாதுகாப்பு வளையங்களோடும் கட்டமைக்கப்பட்டுத் தொடர்ந்து வினை புரிந்து கொண்டிருக்கும் ஒரு வைதீகச் சாதியச் சமூகத்தில், சாதி அடையாளத்தோடு மட்டுமே பிறந்ததில் இருந்து வாழ நேரும் எந்த ஒரு மனிதரும் முழுமையாகச் சாதிய உணர்விலிருந்து வெளியே குதித்துத் தனி ஒரு மனிதராக மலர்ந்து விட்டார் என்று யாரையும் இங்கே கூறிவிட முடியாது என்று சுட்டிக் காட்டும் அதே வேளையில், பாரதியாரின் “தண்டச் சோறு தின்னும் பார்ப்பான்”, “ஏது செய்தும் காசு பேறப்பார்ப்பான்” ஆகிய கவிதை வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

திரைப்படம் இலக்கிய குறித்து பேசும் போதும் காட்சி ஊடகத்தை விட மொழியாலான இலக்கிய ஊடகம் தான் வாசிப்பவனுக்கான சுதந்திரம் மிக்க வெளி என்று கருதுவதாகவும், காட்சி வடிவம் வாசகரின் சுய கற்பனைக்கு இடமில்லாமல் செய்து விடுகிரது என்றும் ஆனால் மொழி வடிவம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கற்பனை உலகைத் திறந்து விடுகிறது என்கிறார். தத்துவ அறிஞர்கள் அல்பெர் காம்யூ, பெட்ரண்ட் ரஸல், நோம் சோம்ஸ்கி, மிஷல் ஃபூக்கோ, தெரிதா. அந்தோணியோ கிராம்சி, சார்வாகனர், புத்தர் ஆகியோர்களின் நூல்களைத் தேடிப் படித்ததையும் குறிப்பிடுகிறார்.

ஈழப் போரில் பிரபாகரனின் தோல்வி மனதிற்குள் ஆற்றவே முடியாத பெருந்துன்பத்தை பெருக்கியவாறு இன்றும் தொடர்வதாகவும் பத்து லட்சத்திற்கும் மேலான தமிழ் சொந்தங்களைப் பலி கொடுத்தும் தமிழினத்திற்கென்று ஒரு குட்டித் தேசிய நிலப்பரப்பு அமையாமல் போனதே என்ற சோகம் சாகும் வரை தீவிரம் குறையாமல் தொடரும் என்றும் ஏக்கத்தோடு குறிப்பிடுகிறார்.

தனது ஆசிரியப்பணி குறித்துக் குறிப்பிடுகையில் காரைக்காலில் தனது மாணவர் ஒருவர் தன் பெயரை பச்சை குத்திக் கொண்டதையும், தற்கொலை செய்து கொள்ளச் சென்ற மாணவர் தன்னை நினைத்து மனம் மாறி திரும்பி வந்ததையும், சிங்கப்பூரில் தனது மாணவர் ரத்தினமாலா பணி புரிந்து வருவதை நேரில்

--4--

கண்டதையும், தன்னிடம் பயின்ற மாணவர்கள் குமார், மனோகரன், சியாமளா, விசாலாட்சி, ஸ்ரீவித்யா, என்று பேராசிரியர்களாக பல இடங்களில் பணி புரிவதை பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

அறிவின் அல்லது புரிதல் திறனின் அடையாளமே கலைச் சொற்களைக் கைப்பற்றுவதும், வரிசைப்படுத்தி வகைப்படுத்துவதிலும் தான் இருக்கிறது என்கிறார். நிகழ்கால அரசியலை “ஆழக்குழி தோண்டிப் புதைக்க வேண்டிய சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைப்பிடிக்கப்பட்ட பழைய குப்பைகளை எல்லாம் “ஏங்கள் தேசியப் பண்பாடு” எனப் புனைந்து மகிழ்வது பழைய நிலவுடைமைச் சமூகக் கொடுமைக்கே நம்மைக் கொண்டு சென்று விடும்” என்று சரியாகச் சாடியிருக்கிறார்.

ஒரு நேர்காணல் எப்படி அமைய வேண்டும், கிடைக்கும் வாய்ப்பினை எப்படி மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்த நூலை குறிப்பிடலாம். இதற்காக திட்டமிட்டு பணியாற்றி அழகிய வடிவியலில் கொணர்ந்தமைக்காக பேரா.பா.இரவிக்குமார் அவர்களை மனதாரப் பாராட்டலாம். நூலை பேரா.பஞ்சுவின் துணைவியார் திருமதி.பிரபாவதி அவர்களுக்கு சமர்ப்பித்திருப்பது இன்னும் சிறப்பு.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. என்றாலும் முழுமையாக படித்துணரும் போது தான் தேனில் ஊறிய பலாச்சுவையை நம்மால் உணர முடியும். இது வெறுமனே கடந்து செல்லும் நூல் அல்ல. நம்முள் இந்த நூல் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

 

-       புதுச்சேரி லெனின்பாரதி.