Friday, 26 December 2014

சென்னை கிருஷ்ணா கான சபாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

சென்னனை தி.நகர் கிருஷ்ணா கான சபாவின் காம கோடி ஹாலில் செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், செல்வி.திவ்யா ரமேஷ் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி 25.12.2014 அன்று மாலை நடைபெற்றது.  இவர்கள் இருவரும் புதுச்சேரி கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் சிஷ்யைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு திரு.வேல்முருகன், வயலின் திரு.ஸ்ரீனிவாசன், மிருதங்கம் திரு.அங்கப்பன்.  நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

















Sunday, 21 December 2014

ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு

ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு
        தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறை சார்பில் “ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் இசைப் போட்டிப் பரிசளிப்பு விழா 16.12.2014 மதியம் 3 மணிக்கு மொழிப்புலக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. அதில் நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்கம் :
முனைவர்.ம.திருமலை (மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) :
        திரைப்பட பாடல்கள் கர்நாடக இராகத்தை அடிப்படையாகக் கொண்டவை. நல்ல பாடல்கள் தாள ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவை.  சாருகேசி இராகத்தில் அமைந்த ‘முல்லை மலர் மேலே’ பாடலை இன்றும் பலரும் ரசிப்பதற்கு அது தான் காரணம்.
        இசை குறித்து ஆழ்ந்த புலமை பெற்றிருந்த ஆபிரகாம் பண்டிதர் ஒரு ஆசிரியர். அவர் நினைத்திருந்தால் தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆண்டு தோறும் இங்க்ரிமேண்ட் வாங்கிக் கொண்டு இருந்திருக்க முடியும்.  சித்த மருத்துவம் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட அவர் அதற்காக அதிக நேரம் செலவிட்டார்.  மலேசியாவிலிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.  பின்னர் இந்தியா திரும்பி இங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.  நான் சமீபத்தில் 12வது 5 ஆண்டு திட்டம் குறித்து படித்தேன். அதையொட்டி தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கிராமத்தை தத்து எடுக்க முடிவு செய்தேன். அவ்விழா ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும்.
        ஆபிரகாம் பண்டிதர் 1859யில் பிறந்தார். 1917ல் கருணாம்ருத சாகரம் நூலை வெளியிட்டார். “உன்னைச் சுற்றி எவ்வளவு குழப்பம் நடந்து கொண்டிருந்தாலும் உன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு முன்னேறு” என்பது தான் அவர் வாழ்க்கை கூறும் பாடம்.  பாரதியார் குறித்து கனகலிங்கம் எழுதிய நூலை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஜனவரியில் வெளியிட உள்ளது. கனகலிங்கம் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டவர். அவரது வாரிசைக் கொண்டு அந்த நூலை வெளியிட வேண்டும் என்பது எங்களின் ஆசை.  விளம்பரமும் கொடுத்தோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. உங்களுக்கு யாரையாவது தெரியும் என்றால் பதிவாளரிடம் தெரிவியுங்கள்.  இசைத் துறை நல்ல எதிர்காலம் உள்ள துறை. எனவே அதைக் கற்க பலரும் முன் வரவேண்டும்.
“ஆபிரகாம் பண்டிதரும், தமிழிசையும்”
பொறியாளர். சு.கோவிந்தராசன், தஞ்சாவூர்
        ஆபிரகாம் பண்டிதர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர்.  தனது சங்கீதம் குறித்த ஆய்வு பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக நூலாகக் கொண்டு வந்தார்.  எடுத்த முடிவை எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற குணம் கொண்டவர் ஆபிரகாம் பண்டிதர்.
        அவர் ஒரு சிறந்த சித்த மருத்துவர். கோரோசனை மாத்திரைகளை சுயமாக தயாரித்து கருவுற்ற பெண்களுக்கு வழங்கினார். மூலிகைப் பண்ணை நடத்தி வந்தார்.  அவரது சித்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அவரது கணக்கில் வரவு செலவு பார்ப்பதற்கு சிரமப்பட்டு, பின்னை தஞ்சாவூர் தபால் நிலையத்தில் ஆபிரகாம் பண்டிதர் கவுண்டர் என்பது திறக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தோடு சிந்திக்கத் தெரிந்த ஆன்மீகவாதி. 100 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்றும் மறுக்கப்படவில்லை. ஆபிரகாம் பண்டிதர் 6 முறை தஞ்சாவூரில் அகில இந்திய அளவில் இசை குறித்த கருத்தரங்குகளை நடத்தினார்கள். அதில் அகில இந்திய அளவிலிருந்து பல மன்னர்கள், வித்வான்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் தனக்கேற்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயற்சித்தார்.  தமிழகம், இந்தியா முழுமை மற்றும் ஐரோப்பிய அளவில் உள்ள இசை அறிஞர்களுக்கு தனது ஐயப்பாட்டினைக் கேட்டார்.  யாரும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். அந்த மாநாடுகளை நடத்திய அமைப்பு தஞ்சாவூர் சங்கீத வித்யாஜன சங்கம்.  அதில் பல்வேறு தலைப்புகளில் விவாத மேடை நடைபெறும்.  தமிழ்ப் பஞ்சாயது, கணிதப் பஞ்சாயத்து. விவாத மேடைகளுக்கு தலைவராக பட்டாச்சார்யா அவர்களும் உதவியாளராக வேம்பு அவர்களும் இருந்திருக்கின்றார்கள்.  இந்த நிகழ்வுகளுக்கு அவருக்கு பூண்டி அப்பாசாமி வாண்டையார் அவர்களும், உதவிக்கு பிச்சமுத்து அவர்களும் இருந்திருக்கின்றார்கள். தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காக இரண்டு வீணைகளைச் செய்தார். தந்திகளை இயற்பியல் விதிப்படி அமைத்தார். நரம்பினைத் தட்டினால் இரண்டு பக்கமும் இசை வரும்.  24 சுரங்களை மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தார். பரோடா மாநாட்டிலே மகன்களை வாசிக்கச் செய்தார்.  மாதவ ராவ் சொன்னார் “இசை குறித்த சர்ச்சை ஓய்ந்தது”
        ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதி திரு.டி.வி.சேஷகிரி ஐயர் சொன்னார் “தமிழ் இசை பற்றிய இந்நூல் தமிழனின் வரலாற்றையும் பேசுகிறது”.  கடல்கோல் என்றறியப்படும் சுனாமி திருச்செந்தூரிலிருந்து பல பகுதிகளையும், இராமேஸ்வரத்திலிருந்து பல பகுதிகளையும் வெட்டி எடுத்துச் சென்று விட்டது. இதனை லெமூரியா கண்டம் என்பார்கள் வெளிநாட்டினர். குமரிக்கண்டம் என்பார் தேவநேயப் பாவாணர். மடகாஸ்கர் தீவில் காணப்படும் பாபோப் என்றழைக்கபடும் மரம் தஞ்சாவூரில் உள்ளது.  ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் கடவுள் பெயர் “மாரி”. வாய்க்கரிசி போடும் பழக்கமும் உள்ளது.
        நைஜீரியாவில் பல கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பஞ்சாபில் உள்ள 400 கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்.  ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடியினர் குறித்த நூல் ஒன்றினைப் படித்தேன். ஆஸ்திரேலியாவில் கொரமண்டல் காடு உள்ளது. கொரமண்டல் என்றால் சோழ மண்டலை என்று பொருள்.  இராஜராஜ சோழன் வெற்றி கொண்ட பல நாடுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.  தமிழகம் எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது என்பதற்கு இதுவெல்லாம் சாட்சிகள். 
        குரல் வளையிலிருந்து வெளி வரும் ஒலியை பகுத்துப் பகுத்துப் பார்த்துக்கொண்டே சென்றால் ஒவ்வொரு கூட்டத்தின் ஒலியும் மாறுபடு. இயக்கு மற்றும் சுருதி கணக்கில் அடங்காதது.

        தொகுப்பு ; லெனின்பாரதி