Thursday, 6 September 2018

தமுஎகச இலாசுப்பேட்டை கிளை -கலைஞருக்கு புகழாஞ்சலி








முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் 6.3.2018 அன்று புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் ..
பத்திரிக்கையாளர்.பி.என்.எஸ்.பாண்டியன் :
எமர்ஜென்சி காலத்தில் முரசொலி பத்திரிக்கையில் “அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க வராதவர்கள்” என்று எண்ணற்ற தோழர்களின் பட்டியலை கலைஞர் அவர்கள் பட்டியலிட்டார். அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தார்கள்.
“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்று சொன்னார்.
“முரசொலியில் பெரியார் ஆண்டு என்று பிரசுரித்தார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக பத்திரிக்கையாளர்களுக்காக “பத்திரிக்கையாளர் நல நிதியம்” அமைத்தவர் அவரே.
அதுபோல இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்காக முதன் முதலில் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததும் அவரே.
மிகுந்த தாராள மனதோடு சிறு பத்திரிக்கைகளுக்கும் அரசு விளம்பரம் கொடுத்துதவினார்.
தோழர்.எல்லை சிவக்குமார் :
கலைஞர் அவர்கள் தமிழ் திரையுலகை ஆண்டவர்.
திரையுலகோடு அவரது தொடர்பு என்பது 75 ஆண்டுகளாகும். தனது 17ஆவது வயதில் ஈரோடு சென்று குடியரசுபத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கோயமுத்தூரிலிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு கதை எழுதித் தருமாறு சாமி கலைஞரைக் கேட்டுக் கொண்டார். கலைஞர் “என் கொள்கை மற்றும் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் அப்பொறுப்பிலிருந்து விலகி விடுவேன்” என்கிற நிபந்தனையுடன் கதை எழுதத் தொடங்கினார். இதற்காக கோவையில் 10 ரூபாய் வாடகையில் வீடு எடுத்துத் தங்கியிருந்து பணியாற்றினார். 1947ல் படம் வெளியானது. குடும்பத்தினருடன் படம் பார்க்க கலைஞர் சென்றிருந்தார். டைட்டில் போடும் போது கதை வசனம் சாமி என்று கார்டு வந்ததும் கலைஞர் கொதித்துப் போனார். கோபத்துடன் திருவாரூர் கிளம்பிச் சென்றார்.
கலைஞர் கதை வசனத்தில் மந்திரி குமாரி முதலில் நாடகமாகத் தான் அரங்கேறியது. பின்னர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்துப் படமாக தயாரானது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது முதல் படம். எம்.ஜி.ஆர் காந்தீய கொள்கைகளில் பிடிப்பு உள்ளவராக இருந்தார். கலைஞர் எப்படியாவது அவரை பெரியாரிய சிந்தனைகளில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக நிறையப் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்குப் படிக்கக் கொடுத்தார். எப்படியாவது கலைஞரை காந்தீய சிந்தனைகளில் கொண்டு வந்து விட வேண்டும் என் எம்.ஜி.ஆர் முயற்சித்தார். இறுதியில் கலைஞர் வென்றார்.
தமிழை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்வானதாக மாற்றிய பெருமை கலைஞர் அவர்களையே சாரும்.
நீங்கள் கதை வசனம் எழுதிய படங்களிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்ட போது பலரும் அவர் பராசக்தி என்று சொல்வார் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் சொன்ன பதில் “நாம்”. நான் மனம் உருகி கதை வசனம் எழுதிய படம் என்று சொல்லி மகிழ்ந்தார். அந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் மார்க்சீய சித்தாந்தத்தை நம்மால் காண முடியும். அதில் ஒரு வசனம் “ ஒவ்வொரு கேள்விக் குறியும் அரிவாள் சுத்தியலாக மாறும்”
தோழர்.ஜே.கிருஷ்ணமூர்த்தி :
கலைஞர் அவர்கள் தான் பிற்பட்டவர்களுக்காக தனி அமைச்சகத்தை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு ஏ.வரதராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட அரும்பணியாற்றினார்.
கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற வாய்ப்பளிக்கும் சட்டத்தை 1970ல் கொண்டு வந்தார். அதற்கான அரசு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு ஆகம விதிகள், வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு.ஹெச்.வி.ஹண்டே அவர்கள் கலைஞரின் ஆட்சியை “மூன்றாம் தர ஆட்சி” என்று சொன்னார். அதற்கு கலைஞர் அவர்கள் “தவறு. இது நான்காம் தர ஆட்சி. அதாவது சூத்திரர்களின் ஆட்சி” என்று சொன்னார்.
திருநங்ககைகளுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கியதோடு தனியே நல வாரியம் அமைத்தார்.
குறிப்பாக இஸ்லாமியர்களின் நண்பர் என்று கலைஞர் அவர்களைச் சொல்லலாம். ஹனீபா பாடல் இல்லாத தி.மு.க மேடையே கிடையாது.
தி.நகரில் இஸ்லாமிய நண்பர்கள் தொழுகை செய்யும் பகுதிக்கு அருகே ஒரு விநாயகர் திடீரென்று முளைத்த போது அதை உடனே அகற்ற ஏற்பாடு செய்தவர் கலைஞர் அவர்கள்.
தோழர்.தி.கோவிந்தராசு :
எந்த அரசியல் தலைவரும் கலைஞரின் உயரத்தை எட்டவில்லை. அரசியலில் தொய்வு வருகிற போது இளைப்பாறுகிற மேடையாக இலக்கியத்தை கலைஞர் எண்ணினார். தமிழகத்தில் விதவை பொட்டு வைத்துக் கொள்ள முடியாது என்று சொன்ன போது ஏன் முடியாது கைம்பெண் என்று சொல்லிப் பாருங்கள் இரண்டு பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
சிலப்பதிகாரத்திற்காக பூம்புகாரில் நிலாச்சோறு போட்டு விழா நடத்தினார்.
கலைஞர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவர் உருவத்தைப் போல மூன்று மடங்கு வரும் என்று கவிஞர்.வைரமுத்து சொன்னார்.
கலைஞரின் கடிதங்கள் 20,000 க்கும் மேலே இருக்கும். அது 13 தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை கவிதை வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியவர்.
பிடரல் காஸ்ட்ரோவைப் பற்றி தமிழில் கவிதை எழுதி அதை அனுப்பி வைதார். அந்த கவிதை கியூபாவில் படிக்கப்பட்டு காஸ்ட்ரோவின் மேஜையை அலங்கரித்தது.

No comments:

Post a Comment