Friday, 21 May 2021

சாலயோரம் நிழல் தரும் மரங்கள் -- பேரா.ராஜ்ஜா - நூல் அறிமுகம்


 

நூல் அறிமுகம்

சாலையோரம் நிழல்தரும் மரங்கள்

ஆசிரியர் : ராஜ்ஜா

வகை : கட்டுரைகள்

பக்கங்கள் : 144

விலை ரூ.120/-

வெளியீடு : இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்), பெரம்பூர், சென்னை 600011 .

                                        அலைபேசி 9444640986.

--ooOoo--

            தனது வாழ்க்கை மேம்படக் காரணமாக இருந்த 16 ஆளுமைகள் குறித்து திரு.ராஜ்ஜா அவர்களின் இனிமையான நினைவுகளுடன் கூடிய பதிவே இந்நூல். இக்கட்டுரைகள் யாவும் புதுச்சேரியிலிருந்து வெளியாகும் மாந்தன் இதழில் 2013 முதல் 2014 வரை ஏணி, கோணி, தோணி எனும் தலைப்பில் தொடராக வந்துள்ளன.

            நூலுக்கு மாந்தன் இதழாசிரியர் திரு.ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ அணிந்துரை வழங்கியுள்ளார். மூத்தோரை மதித்தல், கற்றோருடன் சேரல், நட்பு பாராட்டல், நன்றி கூர்தல் குறைந்து வரும் காலகட்டத்தில் ராஜ்ஜா ஒரு மாறுபட்ட மனிதராகவே காணப்படுகிறார் என்று சரியாகவே கணித்துள்ளார். மேலும் புதுச்சேரி வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் ராஜ்ஜா எழுதிய Glimpses of Pondicherry, A Concise History of Pondicherry, Folktales of Pondicherry ஆகிய நூல்களை கட்டாயம் வாங்கிச் செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திரு.ராஜ்ஜாவின் இலக்கிய வளர்ச்சிக்கு அரவிந்தர் ஆசிரமம் பெரும் பங்காற்றியிருப்பதாக குறிப்பிடுகிறார். திரு.ராஜ்ஜா அவர்களின் இந்நூல் தன்னை இலக்கியப் படிக்கட்டுகளில் ஏற்றி விட்ட பதினாறு பேரையும் அவர்களிடம் அவர் பெற்றுக் கொண்ட கொடைகள், அனுபவங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கும் கோணியாகவும், அவரது எழுத்துலகப் பயணத்தில் தோணியாக துணை நின்ற பலரையும் நினைவுபடுத்தி எழுதப்பட்ட இந்நூல்  One and Only Radja வினால் தான் இப்படி எழுத முடியும் என்று முடித்திருக்கிறார்.

            திரு.ராஜ்ஜா தனது என்னுரையில் செய்ந்நன்றி மறக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அது இருந்தால் எதற்கு முதியோர் இல்லம் ? ஏன் அநாதைகள் இல்லம் எதற்கு மகளிர் மறுவாழ்வு இல்லம் ? என்ற கேள்விகளை நம் முன் வைக்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்று ஒளவையார் சொன்னது உழைத்து வாழ வேண்டும் என்பதை முன் வைத்துத் தான் என்று சரியாகச் சொல்லுகிறார்.

1.   பீட்டர் சாமியார் :

காந்தி வீதியில் அமைந்துள்ள பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர் பீட்டர் சாமியார் அவர்கள். ராஜ்ஜா காலை ஆறு மணிக்கெல்லாம் பள்ளியின் கதவைத் தட்டிய போது கதவைத் திறந்த ஞானஒளி என்று பாராட்டுகிறார். எட்டு மணி பள்ளிக்கு இவ்வளவு விரைவில் வருவதால் கடுப்பான சாமியார் ராஜ்ஜாவின் தந்தையிடம் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறி விடுகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களை தகுதியுள்ளவராக மாற்ற இவர் கையாண்டது இரண்டு தந்திரங்கள். ஒன்று பிகில் மற்றது பிரம்பு. ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே இவை இரண்டும் ஜோப்பை விட்டு வெளியே வருமாம். ஒரு முறை பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் பற்றிக் கேள்விப்பட்டு தனியே வந்து இதை சமாளித்த சாமியாரை “சிங்கம் எப்பவுமே சிங்கிளாத்தானே செயல்படும்” என்கிறார். பீட்டர் சாமியாரின் வகுப்பைக் கேட்பதற்காக இவர் படிக்கும் வகுப்பிலிருந்து ஆசிரியருக்குத் தெரியாமல் தவழ்ந்து சென்று அவர் பாடம் நடத்தும் பக்கத்து வகுப்பறைக்கு திருட்டுத்தனமாகப் போனதையும் ஒரு நாள் மாட்டிக் கொண்டதையும், தன்னை “காட் பிளெஸ் யு மை சன்” என்று தட்டிக் கொடுத்துக் கொண்டே சொன்னது இன்று பலித்ததையும் சொல்லி ராஜ்ஜா புளகாங்கிதம் அடைகிறார்.

2.     பேராசிரியர் சாந்தலிங்கம் :

புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் சேர்ந்த புதிதில் பேராசிரியர்கள் பாடம் நடத்துவது எப்படியிருக்குமோ என்று பயந்து கொண்டிருந்த போது பேரா சாந்தலிங்கம் வகுப்பு நடத்திய முறை கோடை காலத்தில் ஒரு கிளாஸ் நிறைய லஸ்ஸி குடித்தது போல குளுமையாக இருந்தது என்கிறார். நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இவரை அணுகிய போது பழைய புத்தகக் கடைக்கு சென்று வாங்கிப் படிக்கச் சொன்னவர் பின்னர் சிரித்துக் கொண்டே தனது நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொடுத்து மறக்காமல் திருப்பிக் கொடுக்கச் சொன்னதையும் நினைவு கூர்கிறார். திரு.சாந்தலிங்கம் அளித்த பிச்சை தான் இன்று தான் அட்சய பாத்திரமாக மாறி இருப்பதாக பெருமையுடன் சொல்லுகிறார். “எந்த வாத்தியானும் எழுத மாட்டறாம்பா” என்று சாந்தலிங்கம் சொன்ன வார்த்தையில் ஓரளவு உண்மையிருப்பதாகப் படுகிறது. தனது தந்தைக்குப் பிறகு இவரது கால்களை மட்டுமே தொட்டதாக மகிழ்ந்து குறிப்பிடுகிறார்.

3.     எழுத்தாளர் கோதண்டராமன் :

புதுச்சேரி நகரின் அழகில் மயங்கி தெபாஸினே ரிஷ்மோன் வீதியில் இருந்த வீட்டின் நூலகத்தைப் பார்த்து மயங்கி நின்று பின் திரு.கோதண்டராமனுடன் தொடர்பு ஏற்பட்டதை அழகாக விவரிக்கிறார். இலக்கியத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக திரு.கோதண்டராமன் அவர்கள் தான் பார்த்து வந்த வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு சுதேசமித்திரன் மூலம் எழுத்துலகத்தில் சஞ்சரித்தார். ராஜ்ஜாவுக்கும் திரு.கோதண்டராமனுக்கும் இடையிலான உறவு குடும்ப உறவாகியிருக்கிறது. ராஜ்ஜாவுக்கு  மாற்றல் வரவே தொடர்பு விட்டுப் போக மீண்டும் அவரை சந்திக்க முயற்சிக்கும் போது அவர் காலமான செய்தி தெரிய வருகிறது. ஆனால் மரணத்திற்கு முன் அவர் ராஜ்ஜாவிடம் கொடுக்கச் சொல்லி ஒரு அன்புப் பரிசை மனைவியிடம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். அது தான் அவர் உருவாக்கிய நூலகம். திரு.கோதண்டராமன் இப்போதும் தனது வீட்டு நூலகத்தில் சூட்சும உடம்பில் உலா வருகிறார் என்று நன்றிப் பெருக்கோடு கூறுகிறார்.

4.     போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ் :

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு அரவிந்தர் பெயர் வைக்கப் போவதாக வந்த செய்தியையடுத்து நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ் மோதலுடன் தொடங்கும் முதல் சந்திப்பு. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்திக்கிறார். அப்போது ஜார்ஜ் அவர்கள் யூத் ஏஜ் எனும் மாத இதழை நடத்திக் கொண்டிருக்கிறார். இது புதுச்சேரியில் இருந்து ஆங்கில மொழியில் வெளிவந்த முதல் இலக்கியச் சிற்றிதழாகும். இதற்கு வாசகர்களும் அதிகம். இந்த சிற்றிதழில் ராஜ்ஜா அவர்களின் முதல் படைப்பு மறு பதிப்பாகிறது. பின்னர் ஆங்கிலத்தில் எழுத வாசிக்க ஆர்வம் கொண்டோரைக் கொண்டு தொடங்கப்பட்ட யூத் லிட்டரரி கிளப்பில் பங்கேற்றதால் ஆங்கில அறிவு வளர்ந்து அதனால் ஆங்கில நாளிதழ்களில் படைப்புகள் எழுதி அனுப்பி அதனால் சன்மானம் கிடைத்ததையும் அது புத்தகங்கள் வாங்க இன்று வரையும் பயன்படுவதாய்ச் சொல்கிறார். இந்த படைப்புகள் அவருக்கு உள்நாட்டில் ஒடிசா அரசு வழங்கிய ராக் பெபில்ஸ் போன்ற விருதுகளை, பெற்றுத் தந்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார். திரு.ஜார்ஜ் மூலம் தான் மனோஜ் தாஸ், கெ.டி.சேத்னா, எம்.பி.பண்டிட் போன்ற ஆளுமைகளுடன் தொடர்பு கிடைத்ததையும் குறிப்பிடுகிறார். “உன்னை நாடி வருபவர்களை இன்று எனக்கு நேரம் இல்லை.. மன்னிக்கவும்… என்று மட்டும் என்றைக்கும் சொல்லாதே என்று எனக்கு மூன்று பேருமே அறிவுறுத்தியிருக்கிறார்கள்” என்று ராஜ்ஜா பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

5.     அமெரிக்க வியாசர் மேகி லிட்ச்சி கிராஸ்ஸி :

கெ.டி.சேத்னா கேட்டுக் கொண்டதற்கிணங்க வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை ராஜ்ஜா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சேத்னா இவரிடம் சொன்னது “கடிதங்கள் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி அவை உன் மனதை எந்த விதச் சலனத்திற்கும் ஆளாக்கக்கூடாது” என்பதே. இந்த வார்த்தைகள் படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும் தானே. சேத்னா மேகியை சந்திக்கிறார். லிட்ச்சியின் தந்தை ஸ்பானிஸ் நாட்டவர். தாய் பிரெஞ்சுப்பெண்மணி. ஆங்கிலம் கற்றுக் கொண்டதோ ஒரு ஆங்கிலப் பெண்மணியிடம்.  கல்லூரிப்படிப்பு தென் ஆப்ரிக்காவில். இவரோ ஒரு அமெரிக்கப் பிரஜை. திருமணம் செய்து கொண்டதோ ஒரு இத்தாலியரை. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர். இவரின் திறமை கண்டு அன்னை இவரை தனது காரியாதரிசியாக்கிக் கொண்டார். புதுச்சேரிக்கு வருபவர்கள் இங்கேயே ஏன் தங்கி விடுகிறார்கள் என்பதற்கு ராஜ்ஜா அவர்களின் பதில் “என்னைப் பொறுத்தவரை புதுச்சேரி ஒரு மிகப் பெரிய அண்டாவாகவே தோன்றுகிறது. எதெல்லாம் அதில் விழுகிறதோ அதெல்லாம் அங்கேயேதான் கிடக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி போலும்”.  மகாபாரதத்தை புதிய கோணத்தில் படைக்க விரும்பிய லிட்ச்சியுடன் பணி புரிந்த காலத்தையும், அவர் தனக்கு வழங்கிய மாத ஊதியம் ஆயிரம் ரூபாய் குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிடுவதுடன் இன்று வரை அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

6.     அமல்கிரன் என்கிற கெ.டி.சேத்னா :

கவிஞனுக்கு மோட்டுவளை தானே அட்சயபாத்திரம் என்றும் சிரித்த முகத்தோடு ஒருவரை பார்ப்பதே கடினமாக இருக்கிறது என்றும் அதிலும் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பது என்பது என்ன சாதாரண காரியமா என்று வினாயெழுப்புகிறார் ராஜ்ஜா.  சேத்னா உலகப் புகழ் பெற்ற மதர் இந்தியா இதழை நடத்தி வந்தவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மதர் இந்தியாவில் நூல் விமர்சனம் எழுதுகிறார். நொலினியின் படைப்புகளில் ஏழாம் பகுதியைக் கொடுத்து விமர்சனம் எழுதி வரச் சொல்லி தேர்வு வைக்கிறார். ஒரு மாதம் படித்து பின்னர் தயார் செய்து கொண்டு சென்று கொடுத்த விமர்சனத்தைப் படித்து மகிழ்ந்த சேத்னா மதர் இந்தியாவில் நூல் விமர்சனம் எழுதும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ராஜ்ஜா எழுதிச் சென்று கொடுத்த ஆங்கிலக் கவிதைகளை கோபத்துடன் சேத்னா கிழித்தெறிகிறார். கவிதை குறித்து சேத்னா கொடுத்த விளக்கம் இருக்கிறது  பாருங்கள் … “ கவிதை கவிதைதான். அதில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று ஏதும் இல்லை. கவிதை எழுத வேண்டுமானால் உலகக் கவிகளைப் படி. ரசித்துப் படி. உனக்கே புரியும் கவிதை என்றால் என்ன என்பது. பின் கவிதை எழுது” என்று சொல்லியிருக்கிறார். இன்று கவிதை என்ற பெயரில் வரும் பல்வேறு கிறுக்கல்களைப் பார்க்கிற போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தது. மதர் இந்தியா அக்டோபர் 1979 இதழில் இவரது கவிதையை “One Aim – One Desire – One Goal” என்ற தலைப்பில் பிரசுரித்தது. இதை அரிஸ்டோஸ் என்ற அமெரிக்க ஆங்கில மாத இதழ் மறு பிரசுரம் செய்திருந்தது. தான் கிளைவிடக் கற்றுக் கொண்டதும், மற்றவர்களுக்கு நிழல் கொடுக்க பழகிக் கொண்டதும் மதர் இந்தியா பத்திரிக்கையில் தான் என்று மகிழும் ராஜ்ஜா இவருடனான தனது நினைவுகளை “K.D.Sethna : An Introduction Through Interaction” என்ற தனது நூலில் முழுமையாக பதிவு செய்துள்ளார்.

7.     கன்னடச் சித்தர் மாதவ் பண்டிட் :

மாதவ் பண்டிட் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆசிரமத்தின் தி அட்வெண்ட் என்ற காலாண்டிதழும், வேர்ல்ட் யூனியன், சர்வீஸ் லெட்டர் என்ற இரண்டு மாத இதழ்களும் வந்து கொண்டிருந்தன. அவரை ஒரு மாலைப் பொழுதில் பிரசங்கம் செய்யும் போது போலீஸ் அதிகாரி ஜார்ஜ் அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்த நட்பு மலர்கிறது. மனம் சரியில்லாத போதெல்லாம் அவரிடம் ராஜ்ஜா அவர்கள் செல்வதும் இவருக்கு வாழ்க்கை குறித்து பலவற்றை எளிமையாகச் சொல்லுவாராம். மாதவ் பண்டிட் மங்களூரைச் சேர்ந்த கன்னடத்துக்காரர் என்றாலும் ஆசிரமவாசி. வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோருக்கு மாதவ் பண்டிட் எழுதிய LIFE BEAUTIFUL மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் ராஜ்ஜா. மாதவ் பண்டிட்டிடம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டுமென ராஜ்ஜா கூறிய போது இதை முடிப்பதற்குள் மரணம் சம்பவிக்கும். அது உனக்கா எனக்கா என்றுதெரியவில்லை எனக் சொல்லியிருக்கிறார். ராஜ்ஜா கடைசி அத்தியாயத்தை முடிக்கும் முன் பண்டிட் காலமாகி விட்டார். ராஜ்ஜா பண்டிட் குறித்து எழுதிய “M.P.Pandit: A Peep into His Past” பண்டிட்டின் முதலாம் நினைவு தினத்தன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நிறுவனம் 1996-ஆம் ஆண்டிற்கான சிறந்த புத்தகமாக இதைத் தேர்வு செய்து தங்கப்பதக்கத்தை தபாலில் அனுப்பியது அது காணாமல் போய் காலி கவர் மட்டும் கைக்குக் கிடைத்ததும் ஏமாற்றமடைந்த ராஜ்ஜா மீண்டும் முயற்சி செய்து வேறொரு பதக்கத்தை பெற்றதும் சுவாரசியமான செய்திகள்.

8.     மொழியாக்கத்திற்கு முக்கியத்தும் தந்த கவிஞர் மீரா:

“உம்மோட டி.எஸ்.எலியட்,வால்ட் விட்மனோடு மீராவையும் மென்று சுவையுங்கள்” என்று மீராவை ராஜ்ஜாவிற்கு அறிமுகப்படுத்தி சுவைக்கச் செய்தவர் பேராசிரியர் பஞ்சாங்கம். இடையே தனது குணத்தையும் வெளிபடுத்தியிருக்கிறார். “நானும், பஞ்சுவும் அப்படி இல்லை. எந்த ஊருக்கு மாற்றலானாலும் எந்த மேலதிகாரியிடமும் சென்று தலை சொரிந்து பல்லிளிக்கும் வழக்கம் எங்களுக்கு இருந்ததே இல்லை” என்கிறார். ஒரு தலை சிறந்த எழுத்தாளன் கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மீராவை ராஜ்ஜா அவர்களின் வீட்டிற்கே அழைத்து வருகிறார் பஞ்சாங்கம். நூலகத்தை பார்வையிட்டு விட்டு தனது பதிப்பகம் சார்பில் வெளியிட நூல்கள் கேட்கிறார். ராஜ்ஜா அதிர்ந்து போகிறார்.  இறுதியில் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பினையும், பாரதியின் வசன கவிதைகளையும் பதிப்பிக்க எடுத்துச் செல்கிறார். 1981-ல் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கிலத்தில் THE STUPID GURU AND HIS FOOLISH DISCIPLES  என்ற தலைப்பிலும், 1982-ல் பாரதியின் வசன கவிதைகள்  THE SUN AND THE STARS என்ற தலைப்பிலும் வெளிவந்தன. இரண்டுமே அகரம் வெளியீடுகளாக வந்தன.

ஆங்கில நாடாகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குறித்து எளிய முறையில் தமிழர்களுக்காக ராஜ்ஜா எழுத வேண்டும் என்று மீரா சொல்லியிருக்கிறார். இன்று வரை ராஜ்ஜாவால் எழுத முடியவில்லையாம். எப்போது எழுதி முடித்து வெளியிடுவீர்கள் ராஜ்ஜா..?

 

 

9.     எழுத்துச் சித்தர் கெளதம நீலாம்பரன்

கெளதம நீலாம்பரன் குறித்து சொல்லும் போது “குட்டி யானையின் வாலை பிடித்துக் கொண்டு செல்லுமே.. அதே போல் நான் இவரால் பராமரிக்கப்பட்டிருக்கிறேன்” என்கிறார். நீலாம்பரனை ராஜ்ஜாவுக்கு அவர் தாயார் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கெள்தம நீலாம்பரனின் உறவின் எல்லைகள் நாடகத்தை புதுச்சேரி வானொலிக்காக BOUNDS OF RELATIONSHIPS என்ற தலைப்பிட்டு மொழிபெயர்ப்பு செய்தார். தமிழில் எழுத வேண்டுமென நீலாம்பரன் பலமுறை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். கெளதம நீலாம்பரனின் புத்தர்பிரான் தொடரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

ராஜ்ஜா சார்… மொழிபெயர்ப்பு முடிந்து விட்டதா…

10.  தர்மகர்த்தா வரதராசு :

ராமலிங்க சுவாமிகளின் தீவிர பக்தர் வரதராசு ராஜ்ஜாவிடம் சொன்னாராம் “நீ எவ்வளவு உயர்ந்தாலும் பழசையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க மட்டும் என்றும் மறந்துவிடாதே”. இதையே கீதோபதேசமாக ராஜ்ஜா பார்க்கிறார். ராஜ்ஜாவின் படிப்புச் செலவிற்கு பணத்திற்கு ராஜ்ஜாவின் தந்தை கஷ்டப்படும் போதெல்லாம் கொடுத்து உதவியவர் திரு.வரதராசு. பிறந்த ஊருக்காய் என்ன செய்தாய் என்று கேட்ட வரதராசு அய்யனார் கோயிலின் தலவரலாற்றை எழுதும்படி அன்போடு பணித்திருக்கிறார். கோயில் பக்கமே போகாத ராஜ்ஜா கஷ்டப்பட்டு புதுச்சேரியிலுள்ள கோவில்கள் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்து தொகுத்து படைத்திருக்கும் படையல் தான் ANCIENT TEMPLES AND LEGENDS OF PONDICHERRY.

11.  ஆருயிர் நண்பர் ஞானசேகரன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கச் சென்ற போது ஏற்பட்ட நட்பு. இது குறித்துச் சொல்லும் போது “இப்போதெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. அப்படியே கிடைத்தாலும் அந்த நட்பை தக்க வைத்துக் கொள்வதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. நட்பை உடைப்பதற்காகவே பல “புண்ணியவான்களும், புண்ணியவதிகளும்” கங்கணம் கட்டிக்கொண்டு இப்பூவூலகில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். ராஜ்ஜாவும் அவர் நண்பரும் தினமும் காலை இரண்டு மணி நேரம் படிப்பார்கள். ஆனால் பாட புத்தகத்தை அல்ல. நாவல் அல்லது கவிதைத் தொகுப்பு அல்லது நாடகம். பல்கலைக்கழக நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன அவை எங்கே உள்ளன என்பது நூலகரை விட இவர்கள் இருவருக்கும் தான் அத்துபடி. சிதம்பரத்தில் படிக்கும் போது இருவரும் கோயிலுக்கு வரும் “அம்மன்”களை தரிசிக்க சென்று விடுவதையும் குறிப்பிடுகிறார். நண்பர் துணை கொண்டு வெளிவந்த இவரது முதல் ஆங்கில கவிதைத் தொகுப்பு FROM ZERO TO INFINITY.  இந்த நூல் கொல்கத்தாவின் மிகப்பெரிய இலக்கிய விருதான மைக்கேல் மதுசூதன் அகாதமி விருதை பெற்றது. “உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடிதான் ஒவ்வொரு சிறந்த விமர்சகனும்.. நம்மைத் தேடி வருவதே விருது. நாம் தேடிப் போவதற்கல்ல.  அவைகளைத் தேடி, நாடிப்போகும் எந்த படைப்பாளியும், சிறந்த படைப்பாளியாக இருக்க முடியாது“ என்பதே ராஜ்ஜா அவர்களின் கருத்து. உண்மைதானே…

 

 

12.  அமெரிக்காவில் எனக்கொரு தாய்

சென்னை டிவிஎஸ் பஸ்ஸ்டாப்பில் இறங்கி உமர்கய்யாம் ஓட்டலில்  இடியாப்பமும், கால் பாயாவும் விழுங்கி விட்டு பல்கலைகழகத்திற்குச் சென்று தனது ஆராய்ச்சி கட்டுரைகளை வழிகாட்டி பேராசிரியர் எம்.எஸ்.நாகராஜனிடம் காட்டி அவரின் பாராட்டுக்களைப் பெறுவார். ஒரு முறை பேராசிரியர் இவரிடம் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் போது என் பெயரை போடக் கூடாதா என்று கேட்க என் உழைப்பில் உங்களுக்கு பங்கு கொடுக்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். என்ன செய்வது இப்படியும் சில சிறுமை படைத்த பேராசிரியர்கள்.. பின்னர் பிரிட்டீஸ் கவுன்சில் நூலகத்திலும், அமெரிக்க நூலகத்திலும் தனது நேரத்தை செலவிட்டிருக்கிறார். ஒரு நாள் இவருடைய படைப்பைத் தாங்கி PROPHETIC VOICES  எனும் அமெரிக்க சஞ்சிகை வருகிறது. அத்துடன் எங்கள் பத்திரிக்கைக்கும் படைப்புகளை அனுப்புங்கள் என்கிற வேண்டுகோள் ரூத் வைல்ஸ் ஷீலர் கையொப்பத்துடன் வருகிறது. ஆச்சர்யம் தானே .. உடனே இவர் சில கவிதைகளையும், கதைகளையும் அனுப்ப இவர் எழுதிய THE BLOOD  சிறுகதை பிரசுரமாகிறது. இந்தியப் பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கதையினை புஷ்கார்ட் விருதுக்கு ரூத் அம்மையாரே பரிந்துரைக்கிறார். ஆனால் விருது கிடைக்காமல் போன போது ராஜ்ஜாவை விட அதிகம் வருத்தப்பட்டவர் ரூத் அவர்களே. ராஜ்ஜா அவர்கள் கம்ப்யூட்டர் வாங்கக் காரணாமாய் இருந்தவர் இவரே. ராஜ்ஜா அவர்களுக்கு அவரது தாயார் காலமான போது ரூத் ஒரு கடிதம் எழுதியிருந்தார்…” அம்மா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான் என்றாலும் அமெரிக்காவில் உனக்கொரு தாய் என் உருவத்தில் இருக்கிறாள் என்பதை மறந்து விடாதே”. இவர்களின் தூய்மையான உறவாடல் இன்று வரை தொலைபேசி வழியாகவும் ஈமெயிலிலும் தொடர்வதாக ராஜ்ஜா மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

13.  என்னை தலை நிமிர வைத்த என் சிநேகிதி ரீத்தா :

உலகம் முழுக்க எழுதத் தொடங்கியிருந்தாலும் உள்ளூரில் இருந்த சாரைப்பாம்பை இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ராஜ்ஜா அவர்களுக்கு. இதற்காக அழுதிருக்கிறார். அப்போது தான் அந்தத் தொடர்பு கிடைத்திருக்கிறது… “எனக்கென்று நல்லதொரு இலக்கிய கர்த்தாவை ஆசிரம அன்னை எனக்கு வரப்பிரசாதமாக அனுப்பியிருந்தார்.” என்று அவரை ராஜ்ஜா குறிப்பிடுகிறார். அவர்தான் திருமதி ரீத்தா நாத் கேஸரி. இவர் பேராசிரியப் பணிக்கு வருவதற்கு முன் வங்காள மொழி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் நிறைய படைப்புகளைத் தந்திருக்கிறார். அவரின் நறுக்குத் தொகுப்பினை (SCISSORS AND PASTE)  பார்த்து விட்டு ராஜ்ஜா நினைத்துக் கொள்கிறார் “போட்டி வெற்றிகளைக் குவிக்கும். பொறாமை தன்னையே கழுத்தறுத்துவிடும்”. அதன் பின்னர் ராஜாவை அழைத்துக் கொண்டு சாரைப்பாம்பு அலுவலகத்திற்கே செல்கிறார். இவரது படைப்புகளை ஏன் போடவில்லை என்று அதிகாரத் தொனியில் கேட்கிறார். அதன் பின்னர் அவரது கட்டுரைகளை சாரைப்பாம்பு தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருந்தது. அந்த சாரைப்பாம்பு தான் தி ஹிந்து ஆங்கில நாளிதழ். ராஜ்ஜா எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பிஸி பி புக்ஸ் மூலமாக புத்தகங்களாகக் கொணர்ந்தார். GLIMPSES OF PONDICHERRY, A CONCISE HISTORY OF PONDICHERRY, FOLKTALES OF PONDICHERRY, BUSY BEE BOOK OF CONTEMPORARY INDIAN ENGLISH POETRY  ஆகிய நூல்கள் மலர்ந்தன. ROUTLEDGE நிறுவனம் வெளியிட்ட ENCYCLOPAEDIA OF POST-COLONIAL LITERATURES IN ENGLISH எனும் கலைக்களஞ்சியத்தில் ராஜ்ஜா குறித்து கட்டுரையினை ரீத்தா அவர்கள் வழங்கியுள்ளார்.

14.  என் வீட்டை நூலகமாக்கிய மணி :

“வீட்டில் புத்தகங்கள் இருந்தாலே சரஸ்வதியோடு லட்சுமியும் குடியேறுவாள்” என்று ராஜ்ஜாவின் அப்பா அவரிடம் அடிக்கடி கூறுவாராம். பழைய புத்தகக் கடைகளை தங்கச்சுரங்கம் என்கிறார் ராஜ்ஜா. புதுச்சேரியில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சென்னையிலிருந்து பழைய புத்தகங்களோடு வந்து கடை போடும் திரு.மணியை ராஜ்ஜா தனது நெருங்கிய நண்பராகவே கருதியிருக்கிறார். பழைய புத்தகக் கடைகளில் தோண்டத் தோண்ட புதையல் போல கிடைத்துக் கொண்டே இருக்குமாம். இதற்காக எல்லா புத்தகக் கடைகளிலும் ராஜ்ஜா கணக்கு வைத்திருப்பாராம். இவரிடம் ஆங்கிலம் கற்க வரும் மாணவர்கள் கொடுக்கும் மாத ஊதியத்தை புத்தகங்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு காரணமான தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையை இப்படி வஞ்சப்புகழ்ச்சியாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.. “சாக்ரடீசுக்கு கிடைத்த மாதிரி ஒரு ஸேந்திப்பி என் வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்திருந்தால் என் நூலகக் கனவு எப்போதோ கலைந்து போயிருக்கும்”… “என்னிடம் வந்து சேரும் புத்தகங்கள் என்ன காரணத்தினாலோ என்னை விட்டுப் போவதில்லை… புத்தகங்களுக்கு நான் சாந்துப் பொட்டு.. எனக்கு அவை ஜவ்வாது பொட்டு… என் புத்தகங்களே என் உறவினர்கள்.. என் ஆருயீர் நண்பர்கள்.. நட்பு ஒன்றையே பிரதானமாகக் கருதும் என் மனதை நோகடிக்காதவர்கள். என்னுடனே இருந்து கொண்டு எனக்கு குழி வெட்டாதவர்கள்.  முகத்திற்கு நேரே ஒன்று பேசி முதுகின் பின்னால் வேறொன்று பேசத் தெரியாதவர்கள்.. சாகாவரம் பெற்ற ஜீவராசிகள். இவர்களின் மத்தியில் வாழ்வது எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. இவருக்கு பழைய புத்தகங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் திரு.மணி கடை போட்ட பின்னரே ராஜ்ஜாவுக்கு பல மொழி எழுத்தாளர்கள் நிறைய பேர் அறிமுகமாகியிருக்கிறார்கள். மணி இவரின் நெருங்கிய நண்பராக இருப்பதில் வியப்பென்ன…

15.  என்னையும் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியனாக்கி அழகு பார்த்தவர்

ராஜ்ஜாவின் எழுத்துக்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்பா சொல்வாராம்… “இவன் வெறும் பேராசிரியனாக மட்டும் இருந்தால் இவனது மாணவர்கள் தவிர இவனை எவன் மதிப்பான் ..? எழுத்தாளனாகவும் இருப்பதால்தான் இவனுக்கு என்றுமே மதிப்பு”.. ராஜ்ஜா சொல்கிறார் …”என்னதான் செடிக்கு உரமிட்டு தண்ணீர் விட்டாலும் வளர வேண்டும் என்று அது முயன்றால்தானே மரமாக முடியும். நான் முயன்றேன். வென்றேன். என் மீது பல கொடிகளைப் படரவும் விட்டிருக்கிறேன். அந்த கொடிகளும் செடிகளும் இன்றும் என்னை நன்றி விசுவாசத்தோடு பார்க்கிறபோது “நான் வளர்ந்ததனால் ஆன பயனை” எனக்குக் கூறிக் கொண்டே இருக்கின்றன”. ராஜ்ஜாவுக்கு குறிஞ்சிவேலன் என்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கிடைக்கிறார். குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரைப் பற்றி ராஜ்ஜா சொல்லும் போது “மாட்டு டாக்டர் செல்வராசு ஓய்வு பெற்றிருந்தாலும், குறிஞ்சிவேலனுக்கு ஓய்வே கிடையாது.. ஒருவரிடம் இலக்கிய அக்னிக் குஞ்சினை அவர் கண்டு விட்டால் அதை காட்டினில் பொந்திடை வைத்து விடுவார் பிறகு என்ன ? தீம்தரிகிட தித்தோம்தான்” என்கிறார். பின்னர் ராஜ்ஜாவை ஆசிரியராகக் கொண்டு டிரான்ஸ்பயர் என்ற ஆங்கில இதழ் மலர்ந்தது. ராஜ்ஜா மேலும் சொல்கிறார் ‘யார் ஒருவர் மற்றவரை சான்றோனாக்கிப் பார்க்கிறாரோ அவர் அவரது தந்தைக்குச் சமம்” … உண்மை தானே…

 

 

16.  என் குருவாகி வந்த மனோஜ் தாஸ் ..

மனோஜ் தாஸ் அவர்களைப் பற்றி கூறத் தொடங்கும் போது ராஜ்ஜா இப்படி தொடங்குகிறார். “தாயுமாகி, தந்தையுமாகி, அவர்களைவிட ஒரு படி மேலே இருக்கக்கூடிய குருவுமாகி எனக்கு வரவிருக்கும் ஒருவரை”. மனோஜ் தாஸை ராஜ்ஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஜார்ஜ் தான். அரவிந்தரின் இலக்கியத்தை ராஜ்ஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மனோஜ் தாஸ். அவர் வெளியூர் சென்ற சமயங்களில் உரையாற்ற அவர் தன் சார்பாக “என் இலக்கிய வாரிசை” அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ராஜ்ஜாவை அனுப்பியும் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு ராஜ்ஜா மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார். சாகித்ய அகாதெமி இருமுறை மனோஜ் தாஸ் அவர்களுக்கு விருது வழங்கியுள்ளது. மேலும் பெல்லோ விருதினை கொடுத்துள்ளது. ஒரு சமயத்தில் ஒரு நாட்டில் பதினெட்டு பெல்லோ விருது பெற்றவர்கள் மட்டுமே இருக்க முடியுமாம்.. பெல்லோ என்ற சொல்லுக்கு அகாதெமி கொடுக்கும் பொருள் “சாகா வரம் பெற்ற எழுத்தாளர்” என்பதாம். பெரிய விஷயம் தானே.. மனோஜ் தாஸ் இலக்கிய வாரிசு என்று தன்னை அறிவித்தது மிகப்பெரிய நோபல் பரிசு என்கிறார் ராஜ்ஜா. மேலும் ராஜ்ஜா அவர்களை புதுவை பல்கலைக்கழக பிரதிநிதியாகச் செல்ல தகுதியானவர் என்றும் மனோஜ்தாஸ் முன்மொழித்திருக்கிறார். இதனால் சாகித்ய அகாதெமியின்  ஆங்கிலச் செயற்குழு உறுப்பினராக ராஜ்ஜா தெரிவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ராஜ்ஜா சொல்கிறார்..” உழைப்பனுக்குத்தான் பதவி. எதையும் நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. எல்லாம் நம்மைத் தேடி வர வேண்டும்.. வரும்..” நம்பிக்கை தானே வாழ்க்கை.. மனோஜ் தாஸ் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.. இப்படிப்பட்ட ஒருவரை ராஜ்ஜா விடுவாரா.. மனோஜ் தாஸ் குறித்து 1992-ல் PROBING THE PSYCHE: SHORT STORES OF MANOJ DAS  என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அது பின்னர் புதுதில்லி புத்தக வெளியீட்டு நிறுவனம் B R PUBLISHING HOUSE  புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.. மனோஜ் தாஸ் அவர்கள் “நீயும் ஒரு நாள் பெல்லோ ஆவாய்” என்று சொல்லி ஆசீர்வதித்திருக்கிறார்.

நண்பர்கள் அமைவதெல்லாம் மிகப்பெரிய வரம். திரு.ராஜ்ஜா அவர்களுக்குக் கிடைத்த ஆளுமைகள் மற்றும் அவர்களை ராஜ்ஜா உரிய முறையில் பயன்படுத்திக் கொண்ட விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நூல் ராஜ்ஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.. ராஜ்ஜா அவர்களின் உழைப்பு மலைப்பினைத் தருகிறது..

உதவிகள் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் என்பது எல்லாருக்கும் இருக்காது ..  சிலருடனான நினைவுகள் அவர்கள் நமக்கு செய்த உதவிகள் நமது இறுதி காலம் வரை நம்முடனே நடை பழகி வரும்… சில நினைவுகள் உதவிகள் கண்ணில் நீரை வரவழைத்து விடும்… நம் வாழ்வில் நாம் முன்னேற நிச்சயம் சிலர் உதவியிருப்பார்கள்.  ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை நினைவில் கொண்டு அவர்களுடனான நட்பினை எழுத்து வடிவில் பதிவிட்டிருக்கிறோம்…? ராஜ்ஜா இந்த அரிய பணியினை செய்திருக்கிறார்.. பாராட்ட வேண்டிய பணி..

n  புதுச்சேரி லெனின்பாரதி.

 

 

 

 

 

No comments:

Post a Comment