Saturday, 22 May 2021


நூல் அறிமுகம்

தறியுடன்

ஆசிரியர் : இரா.பாரதிநாதன்

பக்கங்கள் : 780

விலை ரூ.650/-

வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், 4/413 மூன்றாவது வீதி, பாரதிநகர்,

                           பிச்சம்பளையம் (அஞ்சல்), திருப்பூர் 641603. கைபேசி : 94866 41586

--00--

            ஒரு தேசபக்த வீரனின் மரணத்தை இயற்கை எப்படிப் பார்க்கிறது…

“ வானம் பலநூறு கண்களால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மேகங்கள் அப்படியே உறைந்து போய் விட்டன. காற்று மட்டும் மெளன சாட்சியாய் சுற்றிச் சுற்றி வந்தது. தாமதமாக வந்த பாதி நிலவு நட்சத்திரக் கூட்டத்தை அவசரமாய் விலக்கி எட்டிப் பார்த்தது. அதன் மீதி முகமும் கறுத்துவிட்டது… எந்த செயற்கைகோளிடம் போய் இந்த குரூரத்தைப் படம் பிடித்து ஊரேல்லாம் அனுப்பக் கூறி உதவி கேட்பது. அதன் பரிபாஷை தான் என்ன? கழுத்து அறுபட்டவனின் ரத்தம் பூமியை சேறாக்கியிருந்தது. தாவரங்களின் மேல்பட்ட குருதி சொட்டு சொட்டாய் வடிகிறது. பெளதீக பொருட்களனைத்தும் கையறு நிலையில் கலங்கி நிற்கின்றன. இந்த அவலத்தை காணச்சகியாமல் வானத்தை கறுந்திரையால் மூடுகிறது மேகம். இடியும் மின்னலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன. சடசடவென விண்ணிலிருந்து பெருக்கெடுத்து வருகிறது மழை. இறந்தவனின் உடலுக்கு சரம்சரமாய் கொட்டி மலர் வளையம் வைக்கிறது. விடியும் வரை எந்த விலங்கும் அவனை தீண்டக்கூடாதென்று பாதுகாப்பாய் நீர் அரண் அமைக்கிறது. மழை நீரோடு கலந்த பிரட்சியாளனின் குருதி, மோரி வழியாக வயற்காட்டுக்கு போகிறது..நாளை விளையும் பயிரில் இரத்தம் மணக்குமோ ? தானியம் உண்ட தாயின் முலைக்காம்பில் வீரம் சுரக்குமோ… பூமித்தாய் தன் மகனுக்கு மணி பூசி குளிப்பாட்டியிருக்கிறால்.  குடம் குடமாய் மழைநீர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. அணிந்திருந்த வேட்டி, சட்டை விலகி செடி கொடியும் அருகம்புல்லும் ரங்கன் உடம்புல் புத்தாடையாய் போர்த்தப்பட்டிருந்தது. மனிதர்கள் யாரும் வரும் முன்னால் ஈமச்சடங்கை இயற்கை முடித்துவிட்டு, ஆடாமல் அசையாமல் மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது”

            ஒரு சாதாரண தறி நெய்யும் தொழிலாளி ஒரு புரட்சிகர கட்சித் தோழர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, வேண்டா வெறுப்பாக முதலில் பழக ஆரம்பித்து பின்னர் கொள்கை கவ்விப் பிடிக்க எப்படி மக்களோடு மக்களாக கலந்து சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்து வாழ்ந்து காட்டினான் என்பதே கதை. நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் கதாபாத்திரங்களோடு நாமும் இணைந்து பயணிக்கிறோம். அவர்களின் சந்தோஷம், துக்கம் , வேதனை, போராட்டம் அனைத்திலும் நாமும் பங்கு கொள்கிறோம். இந்த நாவலில் கதையோட்டத்திற்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்ததும் நான் மிகவும் ரசித்ததும் வர்ணனைகள் தான். அதற்காகவே தோழர்.பாரதிநாதனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். மனுஷன் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.  அந்த வர்ணனைகளை நீங்களும் படித்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு படையலிடுகிறேன்…

வடக்கிலிருந்து வந்த காற்று துவம்சம் செய்தபடியே தென்கிழக்கே பயணப்பட்டது. வழியில் கரட்டு முனியப்பன் சாமியின் சிலை முன்பு நின்று சில நொடிகள் பேயாட்டம் ஆடியது. கனத்த மீசையுடன் முனியப்பன் இதை ஆக்ரோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.” (பக்கம்-17 )

“பெண் சிசுக்களை நெல்லோ, கள்ளிப்பாலோ கொடுத்து கொன்று விட்டால் எங்கிருந்து கல்யாணத்துக்குப் பெண் கிட்டும். பெண்ணால் உருவான சமூகம் அவளுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் மாரியம்மான், காளியம்மன், கன்னியம்மன், திரெளபதியம்மன் என்று இங்கே ஏகப்பட்ட பெண் தெய்வங்கள். எந்த சாமியும் ஏன், இவர்களை ஒன்றும் செய்யாமல் இருக்கிரதென்று தெரியவில்லை” (பக்கம்-19).

“ஊழைப்பவன் எப்போதும் போதையில் இருந்தால்தான் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டன் என்ற கொடூர எண்ணம் அரசாங்கத்துக்கு” (பக்கம்-51)

“பாதையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மேட்டாங்காடு வெறிச்சென்றிருந்தது. சமீபத்தில் ஏர் கலப்பை விழாத குறை காடு. எப்போதோ வேர் கடலை மகசூலை முடித்துவிட்டு காய்ந்த செடிகளை ஆங்காங்கே குத்தாரி போட்டு வைத்திருந்தார்கள். மண்ணின் தாகத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை போதாமல், நிலம் நாக்கு வறண்டு போயிருந்தது. கொஞ்சமாய் காக்கைகள் தெரிந்தன. மண்ணில் உட்கார்ந்து தப்புக் கடலையைக் கண்டுபிடித்து நோண்டி தின்று கொண்டிருந்தன” (பக்கம்-63)

“எங்கெல்லாம் அறியாமை நீடித்திருக்கிறதோ, அவ்விடத்தில் பகுத்தறிவு பலவீனப்பட்டே கிடக்கிறது” (பக்கம்-76)

“ஆள்வோர் தங்களை நவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறையும், சுரண்டலும் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு இன்னும் நீடிக்கிறது. ஆனால், உழைக்கும் மக்களின் பரிதாபம் மட்டும் மாறாமல் ஓட்டுப்பெட்டிகளின் கீழே நசுங்கிக் கிடக்கிறது” (பக்கம்-114)

“ கல்லூரிகளுக்குள்ளேயே மாணவர்களைச் சுரண்டும் நிர்வாகம், சாதி வெறி, தங்கும் விடுதியில் போடப்படும் தரமற்ற உணவு, சுகாதாரக் குறைபாடுகள் இன்னும் பல கொடுமைகளுக்கு எதிராய் மாணவ மாணவியர் போராடுவதைப் பற்றியெல்லாம் எந்த சினிமாவும், கதைகளும் ஏன் சொல்வதில்லை.. வெறும் காதலையும், அதன் தோல்வியையும் பற்றியும் பேசி கல்லூரியென்றாலே இப்படித்தான் என்று அறுதியிடுவது கூட ஒரு வியாபார நோக்கம் தான்… எதிலும் காசு பார்க்க நினைக்கும் முதலாளிகள், அவர்கள் தயவில் ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகள் என ஒரு சிறு கூட்டம் மக்களை ஏய்க்கிறது. அவர்கள் நலனுக்காகவே எல்லா தொழில்களும், ஊடகங்களும் சேவை செய்யுமாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மாணவனும் சரி, மக்களும் சரி, தங்களுக்கான வாழ்க்கையை, பண்பாட்டை மீட்டெடுக்கப் போராடாவிட்டால், எல்லா அபத்தங்களும் வருங்காலத்தில் வாழப்போகும் சந்ததியினரையும் சேர்த்து முட்டாளாக்கும் அறியாமையை ஆழமாக விதைக்கும்” (பக்கம்-121 & 122)

“எளியோரை வலியோர் அடித்தால், வலியோரை தெய்வம் அடிக்கும் என்று பள்ளிக்கூடத்தில் சொன்னார்களே, அது எந்த தெய்வம் ? இவ்வளவும் நடந்தும் அந்த தெய்வம் ஏன் வரவில்லை ? (பக்கம்-147)

“ஓரு அரசியல் அடிப்படையில் கட்டப்படாவிட்டால் எந்த ஒரு தொழிற்சங்கத்தையும் நடத்த முடியாது. விதிவிலக்காக கொஞ்சநாள் தாக்குப் பிடித்தாலும் கடைசியில் அது பின்னடைவைத்தான் சந்திக்க நேரிடும் …” (பக்கம் – 196)

“ஓரு பகுத்தறிவாளனுக்கு அடிப்படைத் தகுதியே கேள்வி ஞானம் தான். அந்த அறிவுதான் அவனை புரட்சிக்காரனாக நிறம் மாத்துது.” (பக்கம் – 216)  

“மக்கள் புரட்சியாளர்களைப் பார்த்து அஞ்சுவதில்லை. மாறாக தாங்கள் அவர்களை

பாதுகாக்க கடமைப்பட்டவர்கள் என்பதை மிக துல்லியமாக உணர்ந்தே இருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவாக நேசிக்கிறார்கள். உழைக்கும் மக்கள் தாங்கள் உண்பதையே, போராளிகளுக்கும் தருகிறார்கள். எனவே, அவர்களும் புரட்சியாளர்களும் நகமும் சதையுமாய் இணைந்தே எப்போதும் இருக்கிறார்கள்..” (பக்கம் – 218)

“ஒருவன் மார்க்சிய உலகாயுதத்தைக் கற்றுக் கொண்டால், அவனுக்கு சமுதாயத்தில் நகழுகின்ற ஒவ்வொரு செயலுக்குப் பின்னணியும் மிகச் சரியாகத் தெரிந்துவிடும் “ (பக்கம் – 247)

“குடிக்கவும், டீ வாங்கவும் ஒரே சொம்புதான் உபயோகப்படும். இன்னும் கூட ஒருசில தறிப் பேக்டரிகளில் குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. எவன் விக்கிக் கொண்டு செத்தால் என்ன, தான் நன்றாக இருந்தால் போதும் தன் மனைவி மக்கள் சுகப்பட்டால் போதுமென்ற முதலாளித்துவ மனோபாவம் தனக்கு லாபத்தை ஈட்டித்தரும் தோழிலாளிகள் மீது துளியும் அக்கறை கொள்வது இல்லை” (பக்கம் - 275)

“இயக்கத்தின் முன்னணித் தோழர்கள் யாருக்கும் குடிப் பழக்கம் அறவே கிடையாது. அப்படி யாராவது சாராயம் குடித்தால் பொறுப்புக்கு வரவும் முடியாது. இது இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே நக்சல் பாரி அமைப்பில் இந்த கட்டுப்பாடு மிகவும் கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது” (பக்கம் – 289)

“வரும் மழையை காற்று விரட்டி விடும் போல இருந்தது. இருப்பினும், வந்தே தீருவேன் என்று மழை மேகங்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தது. எந்த தரப்பு யுத்தகளத்தில் வெற்றி பெறும் என்பதை நிலவு ஒளிந்து நின்று ஆவலுடன் எட்டிப்பார்த்தது. அதில் அச்சமிருந்தது. தெருவில் கட்டிப்புரளும் இரு சண்டைக்காரர்களுக்கு பயந்து போய் இளம் பெண் ஒருத்தி பார்ப்பது போலத் தோன்றியது” (பக்கம் – 311)

“இருளில், ஒவ்வொரு தென்னை மரமும் உயரத்தில் தலை விரித்தாடுவது போலத் தெரிந்தது. மேற்கு மூளையில் அகலமான கிணறு கன்னங்கரேலென்று பெரிய யானையைப் போல படுத்திருந்தது. இன்னொரு பக்கம் பார்த்தால், ராட்சசன் ஒருவ்ன இளைப்பாறிக் கிடப்பது போன்று தோன்றியது. அதன் பக்கத்தில் பயந்த சுண்டெலியாய் நீர் இறைக்கும் சிமெண்டு தொட்டி. கிணற்று மேட்டில் கயிற்றுக் கட்டில்.” (பக்கம் – 315 )

“அரசியல் வேலை செய்வதென்பது இயந்திரத்தனமானது அல்ல. அதற்கு நிறைய நெளிவு சுளிவுகளும், ஒரு விதமான நாசுக்கும் வேண்டும். இடம், பொருள் பார்த்து எதையும் சொல்லி மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தன் மூளையில் இருப்பதை அடுத்தவர்க்கு திணிக்கக் கூடாது. அதே சமயம், எளிதில் புரியாத அரசியல் வார்த்தைகளை கூறி பயமுறுத்திக் கொண்டிருக்க கூடவே கூடாது” ( பக்கம் – 323)

“காவல் நிலையத்திற்கு எட்ட நின்று நீதியும், நியாயமும் கைகொட்டிச் சிரித்தது. வானத்தில் காக்கை, குருவியைக் கூட காணவில்லை. சாலையில் பள்ளி செல்லும் சிறுவர்கள் திரும்பியே பாக்காமல் காவல்நிலையத்தை தாண்டி பயந்து ஓடினார்கள். எதிரே இருந்த பெருமாள் கோயில் மூலவர் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்” (பக்கம் – 355)

“ஆணைப் படிக்க வைத்தால், அது அவனுக்கு மட்டுந்தான் பயன். பெண்ணை படிக்கவைத்தால் ஒரு குடும்பத்துக்கே பலன். அதிலும் இவர்கள் சமூக சிந்தனை உள்ளவர்கள்.” (பக்கம் – 452 )

“இரவோ, பகலோ எல்லா தாவரங்களும், ஜீவராசிகளும் தான் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இயங்கும் பொருட்கள், பிராணிகள், மனிதர்கள் எல்லவற்றுக்கும் உயிரே போராட்டம்தான். எந்த ஒன்று இறந்து போனாலும், அது தன் போராட்டத்தை நிறுத்திவிட்டது என்றுதான் அர்த்தம்.” (பக்கம் – 492 )

“கிழடு தட்டிப் போன சுரண்டல் அரசாங்கத்தின் அந்திம காலத்தைப் போல முனியம்பட்டி – இருப்பாளி புறவழிச் சாலை பொத்தலாகிக் கிடந்தது. அது தார் சாலை இல்லை. வெறும் மண்ரோடுதான். குண்டும் குழியுமாய் கால் நடைகளே பாதம் வைக்க யோசிக்குமளவுக்கு அவலநிலை காட்டியது… விடியற்காலை நேரம் இருளை விரட்டப் போராடிக் கொண்டிருந்தது. தன் சிம்மாசனத்தை இழக்க விரும்பாத முதிய அரசனாய் இருட்டு அழுது அடம் பிடிப்பதாய் தோன்றியது” ( பக்கம் – 503)

“சுரண்டல்வாதிகளுக்கு என்றுமே உண்மையான அன்பு, பாசம் இருந்ததில்லை. பெற்றோரே ஆயினும், தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாவிட்டால், அவர்களை விஷம் வைத்து கொல்லவும் தயங்க மாட்டார்கள். கொன்று விட்டு செத்தவனுக்குப் பொன்னாடை போர்த்தி தங்கள் பகட்டை காட்டிக் கொள்வார்கள்” ( பக்கம் – 527)

“விடிவதற்கு வழிகாட்டுவது போல காலையின் உற்சாகத்தோடு பறவைகள் கத்தியபடி திரிந்தன. அதனதன் மொழியில் விதவிதமாய் குரலெடுத்து வருகின்ற பொழுதை வரவேறறன. அதைப் பார்க்கையில் வாழ்க்கை தன்னம்பிக்கை நிறைந்ததாய் தோன்றியது. எல்லா இருட்டும் வெளிச்சத்தில்தான் முடிகிறது” (பக்கம் – 531)

“ஏப்படிப்பட்ட ஊனம் ஏற்பட்டாலும் மனிதன் தன் வாழ்தலுக்கான போராட்டத்தை எதிர் கொள்ளவே செய்கிறான். கண்கள் இல்லாதவர்களும், கால்கள் சூம்பி போனவர்களும் இந்த உலகத்தில் போராடி வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். வாழ்தலே எல்ல உயிரினங்களுக்கும் ஒரே நோக்கமாய் இருக்கிறது. இதில், மனிதன் மட்டுமே தன் சுயகெளரவத்தை மேம்படுத்திக் கொள்ள பிரயத்தனப்படுகிறான். மனிதனை மனிதன் சுரண்டும் இழிநிலையை வேரறுக்க யுத்தம் செய்கிறான்” (பக்கம் – 544)

“கைது என்பதும் கைதிகள் என்று சொல்லப்படுவதுஜ்ம் மானுடத்திற்கு எதிரானது. எனவே, இங்கே இருப்பவர்களை சிறைவாசிகள் என்றுதான் அழைக்க வேண்டும். கிராமவாசி, நகரவாசி என்பதைப் போல் சிறையில் வசிப்பவர்கள் சிறைவாசிகள்தான்” (பக்கம் – 642)

“சமூக உறவில் யாருக்கு யார் வாரிசென்பதை சொந்த இரத்தம் தீர்மானிப்பதில்லை.  வர்க்க அடித்தளத்திலிருந்து எழும் உன்னத லட்சியங்களே தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் புரட்சியாளர்களுக்கு அவர்களின் முன்னோடிகளே தாய், தந்தையராய் ஆகிறார்கள்” (பக்கம் – 670)

“இப்ப நானு மறுபடியும் முழுகாம இருக்குறேன். புரட்சிக்குக் கொடுக்க எனக்கு இன்னொரு உசுரு இருக்குது …” என்று கம்பீரமாகச் சொன்னாள்…” (பக்கம் – 676)

“வெறும் அலங்கார பொம்மைகளாக இருக்க என்றுமே பெண்கள் விரும்பியதில்லை. சமூகத்தில் அவர்கள் பங்கு படுக்கைக்கும், தொட்டிலுக்கும் மட்டும் உரியது அல்ல. உண்மையில், ஒரு சமூக உருவாக்கமே பெண்ணில் இருந்துதான் தொடங்கியது. பெண்தான் தன் குழந்தைகளுக்கு உணவு தேடித் தந்தாள். காட்டில், பழங்கள் பறித்துக் கொடுத்தாள். கொடிய விலங்குகளை தானே முன் நின்று வேட்டையாடினாள். கண்ணின் இமை போல தன் சந்ததியைக் கட்டிக்காத்தாள். பின்னால் வந்த தனியுடமை ஆணின் கொடூர புத்தி அவளை அடிமையாக்கி விட்டது” (பக்கம் – 702)

“களவொழுக்கம் என்பது பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தில் என்றும், எப்போதும் அனுமதிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தான் விரும்பிய நபரோடு வாழ இரு தரப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் தன்னை நம்பி வந்த வாழ்க்கைத் துணையை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய் உறவு கொள்வது நிச்சயமாய் கலாச்சார சீர் கேடு” (பக்கம் – 721)

“மாதவி வீட்டுக்குப் போன கோவலன் திரும்பி வருகிற வரை காத்திருந்தாள் கண்ணகி என்றெல்லாம் காவியங்கள் எழுதி பெண்ணடிமையை நியாயப்படுத்த முடியாது. தனியுடமைக்கு காவல் நிற்கின்ற இந்த காப்பியங்கள். ஒருவனுக்கு ஒருத்தியென்று சொல்லி வைத்தவர்கள் களவோழுக்கம் செய்யும் ஆணுக்கு என்ன தண்டனையென்பதுப் பற்றி கூறவே இல்லை” (பக்கம் – 722)

“கையில் கத்தியுடன் முனியப்பன் சிலை முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. எந்த தலைமுறையிலோ மனித இனத்துக்காகப் போராடிய ஒரு வீரனின் அடையாளம் இது” (பக்கம் – 750)

            இந்த நாவல் தான் பல மாற்றங்களுடன் “சங்கத்தலைவன்” திரைப்படமாக மலர்ந்திருக்கிறது. ரங்கன் கதாபாத்திரத்தில் கருணாசும், சிவலிங்கம் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். திரு.பாரதிநாதன் திரைக்கதையை கச்சிதமாக வெட்டி சேர்த்து மெருகூட்டியிருக்கிறார். இருந்தாலும் நாவல் படிக்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி, கோபம், வேதனை, துக்கம், துயரம், எல்லாம் திரைப்படத்தில் இல்லை என்பது என் வரையில் ஒரு ஏமாற்றமே. இரண்டவாது நாவலை முழுமையாக படமாக்குவது என்பதும் இயலாது.

            ஒரு நாவலைப் படித்தால் நீண்ட காலத்திற்கு நம்மை தூங்க விடாது துரத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பார்க்கின்ற மனிதர்களையெல்லாம் அந்த கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வைக்கும். தறி நாவலை அவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

n  புதுச்சேரி லெனின்பாரதி


No comments:

Post a Comment