Friday, 24 October 2014

கவிதை என்பது யாதெனின் ...
-காவனூர்.ந.சீனிவாசன் (பேச :9600898806)-
        கவிதை என்பது தனக்குள் கணக்கில் அடங்காத கூறுகளை மூளை மடிப்புப் போலச் சுருட்டி வைத்துக் கொண்டுள்ளது.
        எண்ணற்ற மெளனங்களையும், இடைவெளிகளையுமம், புதிர்களையும், தொனிகளையும் யூகங்களையும் தனக்குள் குடியிருக்க அனுமதித்துத் துல்லியமாக தன்னை கட்டமைத்துக் கொண்டு உணர்ச்சிகளின் வெளியீட்டுத் தளத்தில் ஜீவத் துடிப்புள்ளதாக, தன்னை சிருஷ்டித்துக் கொண்டு தனக்குள் கவிஞனையும், கவிஞனுக்குள் தானுமாக மாறி மாறி ஒரு சுழற்சியாக இயங்கியும், இயக்கியும் ஒரு நிதர்சனத்தை தன் இருப்பில் தக்க வைத்துக் கொள்கிறது.
       கவிதை மொழி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சியின் மூலம் தான் கவிதையில் உருவம் அமைகிறது. மொழிக் கூறுகளின் அடிப்படையில் கட்டப்படும் இலக்கியம் தனக்கென்று சுதந்திரமான அமைப்பைக் கொள்கிறது. தற்காலிகக் கவிதைக்குரிய பாடு பொருள்கள் அனைத்திற்கும் நிலைக்களமாக அமைவது சமுதாய உணர்வும், மனிதநேய உணர்வுமே ஆகும்.
      மனநெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான நகர்வுகளை நகர்த்தும் சக்தி வாய்ந்தவொன்று. ஆழ்ந்த சிந்தனையும், நுட்பமான கற்பனைத் திறமும் இணைந்து அமையப் பெறும் படிமத்தினாலேயே கவிதைக்கு சிறப்பு கிடைக்கிறது.
      எழுதுபவனின் மனதீட்சண்யம்; புத்துணர்வு தூண்டுதல் இணைந்து தருகிற சொற்பிரயோகம், நுட்பமான பரிமாணத்திலும் வேகம் குறையாத வார்த்தைகள், சூட்சுமமான பொருள் பொதிவு என ஆழமான கூர்மையுடன் யதார்த்தையும் தாங்கி சலனமற்று செல்கிறது கவிதைக்குள் அவரவர் மெளனநதிகள் அலைகளை எழுப்பியவாறு.
     கவிதைகளின் உள்ளீடுகளில் அதன் பரப்பு முழுவதும் நிரம்பி வழிகிறது கவிஞர்களின் எல்லையற்ற அனுபவத் துடிப்புகள் ..
     சிந்தை நெருப்பைத் தூசிதட்டிவிட்டு கொஞ்சம் வாசிக்க கையிலெடுங்கள். ரசிக்கும் கணங்களை விட ஆழமூழ்கி திளைக்கும் கணங்கள் உன்னதமானவை .................. (பதிவுத் தேதி : 24.10.2014 / 2140)

Sunday, 12 October 2014

இன்று நடந்தவை
இன்று 12.10.2014 வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சரஸ்வதி மஹாலில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் சார்பில் ஆறாம் ஆண்டு மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.  மாநாட்டின் சில காட்சிகள் :
மலர் தேவைப்படுவோர் மரு.நாக.குமார், ஹரி ஹெர்பல்ஸ், 5/3 மேலத் தெரு, வைத்தீஸ்வரங்கோவில், சீர்காழி தாலூக்கா, நாகை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கைபேசி எண். 9486717297. அரிய பல 18 சித்த மருத்துவம் தொடர்பான கட்டுரைகளுடன் மிகச் சிறப்பாக மலர் வெளி வந்துள்ளது.







இன்று நடந்தவை
இன்று 12.10.2014 வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சரஸ்வதி மஹாலில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மரு.க.கோ.மணிவாசகம் எழுதிய இரண்டு சிறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன
உயிர்க்காக்கும் சைவ உணவு
சைவ உணவின் சிறப்பினை மருத்துவ ஆதாரங்களோடு விளக்கும் எளிய பிரசுரம்.
மூலிகை மருந்டதுகள் செய்வோம்
39 சித்த மருந்துகள் தயாரிப்பு குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரசுரங்களும் தேவைப்படடுவோர் அணுக வேண்டிய முகவரி : அரிமா.மரு.க.கோ.மணிவாசகம்,2-4  பி தெற்குத் தெரு, தேவூர் 611 109 நாகப்படட்டினம் மாவட்டம்.  கைபேசி எண். 9843592039

Sunday, 5 October 2014

படித்து மகிழ்ந்த நூல்..
உழைப்பின் நிறம் கருப்பு
சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுவைப்பரணி இலக்கிய இதழில் நூல் அறிமுகம் பகுதியில் வெளியிடுங்கள் என்று கொடுத்த நூல்.
திருவண்ணாமலைக் கவிஞர்.ஆரிசன் (கைபேசி எண். 9442311118) அவர்கள் தனது இலக்கிய நண்பர்களுக்கு கைபேசி மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இது இவரது ஐந்தாவது ஹைக்கூ தொகுதியாகும். அருமையான புகைப்படங்கள் அவரது எழுத்துக்கு மேலும் மகுடம் சேர்க்கின்றன.
சில ஹைக்கூகளைப் பார்க்கலாமா ?
* வரப்பு தகராறு                                          * ஊதிய உயர்வு கேட்டு
   வக்கீல் பாக்கெட்டில்                                அர்ச்சகர்கள் போராட்டம்
   நிலம்                                                                கல்லாக சாமி.
* கோஷ்டிப் பூசலின்றி                             * பயிர் மேய்ந்து
   நிம்மதி தவழ்கிறது                                   கொழுத்தது வேலி
   சுடுகாடு                                                          அரசியல்
* மாடுகள் விடுவித்து                              * தோல் டாக்டருக்கு
   மனிதர்களைப் பூட்டினர்                         பின்னால் இருக்கிறது
   நுகத்தடி உலகமயம்                                 பெரும் "படை"
* இருட்டின் காதலை                               * அம்புகள் தைத்த போதி மரம்
   வெளிச்சத்தில் பேசியது                         ரத்தத்தோடு புத்தர்
   நிலவு                                                              இலங்கை இனவெறி
* சுமையோடு தான்                                  * நீதிமன்றத்தில்
   வாழ்க்கை                                                    விரைவாய் கிடைக்கிறது
   ஆமை                                                            வாய்தா
* ஊர்தோறும் மதுக்கடைகள்               * நடைவண்டிப் பயணம்
   வெறிச்சோடிக் கிடக்கின்றன               இசை சேர்க்கிறது
   நூலகம்                                                          குழந்தையின் கொலுசு
     பல கவிதைகள் படித்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றன. அதுவே இந்த நூலின் வெற்றி.   (05.10.2014 - 2040)