Wednesday, 10 September 2014


11.9 மஹாகவி நினைவு நாள்
" பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ.
உனக்கு அறிவில்லையா ? உனக்கும் காது கேட்காதா ? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேகும் வரங்களையெல்லாம் கொடுத்து விடக் கூடாதா ?
முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். .....
கடங்காரை தொல்லையும், அத்துடன் வந்து கலந்தது.
வைத்தியனுக்கும்க் கொடுக்கப் பணமில்லை. குழப்பம். குழழப்பம் - தீராத குழப்பம். எத்தனை நாட்கள். எத்தனை மாதங்கள். எத்தனை வருஷங்கள் .
பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படடி திருவருள் செய்ய மாட்டாயா ?
என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை அயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும் .
எனது குடும்பப்பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது உன்னைப் புகழழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது....
ஓயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே தூ தூ தூ கோழை ..
செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது ? பொய் வாயிதா, பொய் வாயிதா, பொய் வாயிதா - தினம் இந்தக் கொடுமை தானா ? சீச்சீ
பராசக்தி - உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டேயிருந்தால்....
மஹாசக்தி - நீ யிருப்பதை எவன் கண்டான் ? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான் ? இந்த உலகம் - சரி, சரி,
இப்போது உன்னைக் வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று. உன்னைப் போற்றுகிறேன்.
(முனைவர்.சிருங்கை சேதுபதியின் சொற்பொழிவாளர் பாரதியார் நூலிலிருந்து)
என்னே முண்டாசுக் கவிஞனின் ஆக்ரோஷம் . கோபம் .
எல்லாம் சில நொடிகள் தான் .
இவனோடு வாழ முடியாமல் போய் விட்டதே என்பதை நினைக்கும் போது கண்ணில் நீர் திரையிடுகிறது ..
வாழ்க மஹாகவி ..

Friday, 5 September 2014

இன்று படித்து மகிழ்ந்த கவிதை ..
என் தாய்
நான் நீண்ட காலமாய்
என் தாய்தரும்
ரொட்டித் துண்டிற்காக
ஏங்குகிறேன்

என் தாய் தரும்
காபிக்காக,
அந்த உன்னதத்
தொடும் உணர்விற்காக
நான் ஏங்குகிறேன்

குழந்தைப் பருவத்தின் நினைவுகள்
என்னுள் நிறைந்துள்ளன
ஒவ்வொரு நாளும்
வளர்ந்துள்ளன.
நான் இறக்கும் வேளையிலே
என் மதிப்போ,
என் தாய் சிந்திய கண்ணீரின்
உண்மை மதிப்பு.
அதுவே என் வாழ்வின் மதிப்பு.

ஒரு நாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
என்னை உன் கண் விழியின்
திரையாய் என்னை எடுத்துக் கொள்.
என் எலும்புகளை
புற்களால் போர்த்தி,
அதில் உன் பாதச் சுவடுகளை
பதித்து ஆசீர்வதிப்பாயாக.
உன் தலைமுடி குஞ்சத்தில்
எங்களைக் கட்டிக் கொள்.
உன் அங்கியின்
பின்புறத்தை நான்
பற்றிப் பிடித்துக் கொண்டே
நான் அழிவற்ற சக்தியாய்
தெய்வீகமாய்
உனது ஆழ்மனதைத் தொடுவேன்.
ஒருநாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
உன் வீட்டிற்கு
என்னை விறகாய்
தீமூட்ட எடுத்துக் கொள்.
உன் வீட்டின் மேற்பரப்பிலே
துணி உலர்த்தும் கயிறாய் நான்.
உனது வாழ்த்தின்றி
நான் மிகவும் தளர்ந்து விட்டேன்.
நிற்கும் சக்தியற்றவனாக,
நான் முதிர்ந்து விட்டேன்.
என் மழலைப் பருவத்தின்
நட்சத்திர வரைபடங்களை
எனக்குக் கொடு.
அவற்றை விழுங்கி
உட்கிரகிப்பேன்.
அதன் மூழம் பாதையை
தேர்ந்தெடுத்து
உன் கூண்டிற்கு
திரும்புவேன்
- கவிஞர்.மஹ்மூத் தர்வீஷ்,  பாலஸ்தீனம்
நன்றி : திசை எட்டும் - மொழியாக்கக் காலாண்டிதழ் - ஜூலை - செப்ட் 2014
அரபி மொழி இலக்கியச் சிறப்பிதழ் - ஆசிரியர் : குறிஞ்சிவேலன், குறிஞ்சிப்பாடி

Thursday, 4 September 2014

கவிதை உலா ,
இன்று  படித்து மகிழ்ந்த ஒரு கவிதையில் சில வரிகள் ..

வந்தவ ரெல்லாம் வாழுகின்றார் - தமிழ்
மண்ணிண் மைந்தரோ வாடுகின்றார் - குறு
மந்திக ளெல்லாம் சிங்கமென - ஒளி
மகுடம் அணிந்தே உலவுகின்றார் - நல்ல
சிந்தனை யாளர் தெருவோரம் - பகல்
சோற்றுக் கின்ரியும் திரிகின்றார் - இந்த
நொந்திடும் நிலைதனை மாற்றும் வரை - இது
நிச்சயம் எனக்கினி ஓய்வில்லை ...

கடவுள் பெயரால் ஒரு கூட்டம் - மிகு
காசுகள் குவிப்பதில் தான்நாட்டம் - பேசும்
படங்கள் காட்டும் ஒருகூட்டம் - காமப்
பாலினை வார்ப்பதில் தான் நாட்டம் - அருங்
கடமை யென்றலரும் ஒரு கூட்டம் - பதவி
கவர்வதில் கவிழ்ப்பதில் தான்நாட்டம் - இந்த 
மடமைகள் முற்றாய் மாய்க்கும் வரை - என்றன்
மனத்திற் கென்றும் ஓய்வில்லை 

எழுதியவர் முனைவர் ம.நாராயணன், வேலூர்
வெளிவந்த இதழ்  தமிழ் லெமூரியா, மும்பை.

Friday, 22 August 2014

புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் 22ம் ஆண்டு விழா புகைப்படங்கள் - உதவி செய்தி மற்றும் விளம்பரத்துறை புதுச்சேரி







புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் 22ம் ஆண்டு விழா

புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தின் 22-ஆம் ஆண்டு விழா
        புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தின் 22-ஆம் ஆண்டு விழா 21.08.2014 மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் ஆடிடோரியத்தில் நடைபெற்றது.
        நிகழ்ச்சியினை புதுச்சேரி முதல்வர் திருமிகு.என்.ரங்கசாமி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது புதுச்சேரியில் நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து தனது அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார்மேலும் புதுச்சேரியின் நிலத்தடி நீர் மாசுபடக் கூடாது என்பதற்காக அத்தகைய தொழிற்சாலைகள் எதையும் புதுச்சேரியில் தொடங்க தனது அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்பாகூர் ஏரியின் பெருமையினையும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தும் பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகம் சரியான நேரத்தில் நடிக்கப்படுவதையும் பாராட்டினார்.
                    முதலாவதாக கலைமாமணி திருமதி.எஸ்.மாதங்கி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வயலின் கோவை.எஸ்.உஷா, மிருதங்கம் திரு.எம்.சிவக்குமார் (திருவண்ணாமலை),  கடம் திரு.வெங்கடகிருஷ்ணன், தம்புரா.இராதாசங்கர். நிகழ்ச்சி தேனாய் இனித்த்து.  அனைத்து சுவைகளையும் கலந்து அறுசுவை உணவு சாப்பிட்ட திருப்தி.
        அதனையடுத்து கலைமாமணி திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களின் சலங்கை கல்ச்சுரல் அகாடமி மாணவ மாணவிகளின் பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகம் நடைபெற்றது. வாய்ப்ப்பாட்டு திருமதி.சாந்தி கோபாலகிருஷ்ணன், மிருதங்கம் திரு.அங்கப்பன், வீணை திருமதி.டாடா பானுமதி, வயலின் திரு.ஸ்ரீனிவாஸன், பங்காரியாக செல்வி.கிருத்திகா, சிங்காரியாக செல்வி.திவ்யா, பங்காரி-சிங்காரி தாயாக செல்வி.பிரேமா, தோழியாக செல்வி.திவ்யதர்ஷினி, ஊர் சபையினராக திரு.கிருஷ்ணன், திரு.குமரன், செல்வன்.மரி ஆண்டனி தினகர், செல்வன்.காசிராஜன்  மற்றும் குழந்தைகள் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். கவிஞர்.வில்லியனூர் பழனி அவர்களின் கவிதையாக்கத்தின் சிறப்பினை நன்கு உணர முடிந்தது. ஒரு மிகப் பெரிய பணியினை தனியொருவராக சாதித்திருக்கும் கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் உழைப்பும் திறமையும் பாராட்டத்தக்கது. பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகத்தின் வெற்றி கூட்டு முயற்சிக்கும், தளராத உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.

                    நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சம் கவிதாயினி உமாமோகனின் தேனினும் இனிமையான தொகுப்புரை. மறைந்து வரும் மண்ணின் மணம் பேசும் கலைகளை ஆதரிக்கிற வேலைகளைச் செய்யும் புதுச்சேரி தொலைக்காட்சியின் நோக்கம் பாராட்டத்தக்கது. தொடரட்டும் புதுச்சேரி தொலைக்காட்சியின் இலட்சிய இப்பயணம் …  இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு இனிய செய்தி .. தூர்தர்ஷனின் தேசிய சேனலில் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 20ம் தேதி காலை 8 மணிக்கு ஒலி/ஒளிபரப்பாகிறது .. அவசியம் கேளுங்க.