Sunday, 4 January 2015

புதுச்சேரியின் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 9வது மாநாடு

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரியின் 9-ஆவது மாவட்ட மாநாடு 04.01.2015 அன்று புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
செயலறிக்கையிலிருந்து சில பகுதிகள் :
·        புதுவையில் பல கலை இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் பெரும்பாலானவை தனி மனிதர்களை மையமாகக் கொண்டவை. அவர்களின் புகழ்பாட ஏற்பாடு செய்து அதைக் கேட்டு இன்புற்றுக்களிக்க அவர்களே உருவாக்கிக் கொண்டவை. அவற்றின் செயல்பாடுகளும் அதற்கேற்பவே இருக்கின்றன. பாராட்டு விழா, விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா போன்றவையே பெரிதும் நடக்கின்றன. மாறி மாறி அதே பேச்சாளர்கள் அதே பார்வையாளர்கள் எனச் சுழற்சி முறையில் செயற்பாடுகள் உள்ளன.
·        புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறை நூலகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூல்களை ஒழுங்காக வாங்கினாலே இத்திட்டம் (நூல்கள் வெளியிடுவதற்காக ரூ.10,000/- நிதி வழங்கும் திட்டம்) தேவையில்லை. எனவே நூலகங்களுக்கு நூல்களைத் தவறாது வாங்கி விட்டுப் பிறகு நிதி உதவும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
·        நிதியுதவி  வழங்கும் திட்டத்தில் இறுதிப் பட்டியல் தயாரிக்கும்போது குழுவினர் எல்லோரும் கூடி விவாதித்துத் தெரிவு செய்தால் அதிகம் பிழைகளோடு நூல்கள் வெளிவருவதைத் தடுக்கலாம்.
·        புதுச்சேரியில் இன்று மாமணி விருதுகள் மா MONEY (பெரும்பண) விருதுகளாக மாறி விட்டன. எனவே விருதின் மதிப்பைக் காப்பாற்ற விருதிற்கான பணப்பயனை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் புதுவை அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மாமணி விருதுகள் பென்ஷன் திட்டங்களல்ல.
·        புதுவை அரசின் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படுகின்றனவா என்பதே தெரியவில்லை. பள்ளி நிலையிலேயே அதிக கமிஷன் கொடுக்கும் புத்தக விற்பனையாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கிக் கணக்குக் காட்டப்படுகிறதா அல்லது புத்தகங்களே வாங்குவதில்லையா எனத் தெரியவில்லை.
·        எல்லா பள்ளிகளிலும் நூலகர்கள் இருப்பதையும் அவர்கள் நூலகப் பணி தவிர மற்றவற்றையெல்லாம் செய்யும் நிலை இல்லாமல் நூலகப் பணியை ஆற்றச் செய்வதும் வாரம் ஒரு பிரிவேளையாவது எல்லா மாணவர்களும் நூலகம் சென்று படிக்கும் ஏற்பாட்டைச் செய்வதும் மிகவும் இன்றியமையாதது.
·        தமிழக அரசு ஏற்கெனவே கன்னிமாரா நூலகம் இருக்க புதிதாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னை கோட்டூர்புரத்தில் மிகச் சிறப்பாகக் கட்டிச் செயல்படுத்தி வரும் நிலையில் நாமோ மிக நல்ல நூலகத்தை மோசமடைய விட்டு விட்டு இருக்கிறோம். அதைச் சீர்படுத்திப் புதுவைக்குப் புகழ் சேர்க்கும் இடமாக மாற்ற வேண்டும்கணணி மயமாக்கப்பட்ட நூலடைவு அமைப்பும் படி எடுத்தல் வசதி, மின்னணு நூலகப் பகுதி, குழந்தைகள் பகுதி போன்றவையும் வேண்டும்.
·        புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் செயல்கள் கவலையளிப்பதாக உள்ளனசங்கத்தில் சேர விரும்புவோர் சங்க அலுவல நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரும் வகையில் விதிமுறைகள் இருக்க வேண்டும் எனும் நியாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : (சுருக்கம்)
1.       பாரதி நினைவு இல்ல புனரைமப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ;
2.       கலை பண்பாட்டுத் துறையின் விழாக்களை குழுக்கள் அமைத்து சீர்படுத்த வேண்டும் ;
3.       ரோமன் ரோலண்ட் நூலகத்தை நவீனப்படுத்த வேண்டும் ;
4.       புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு நடத்தியது போன்ற புத்தகக் கண்காட்சியை உடனே நடத்த வேண்டும் ;
5.       எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை எரித்தத்தற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது ;

          மாநாட்டை வாழ்த்தி தோழர்.எஸ்.கருணா (துணைப் பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச – திருவண்ணாமலை), தோழர்.சு.இராமச்சந்திரன் (மாநிலப் பொருளாளர் – த.மு.எ.க.ச – புதுசேரி), ஷீத்தல் நாயக் (சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம்) பேசினார்கள்.
மாநாட்டில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்                        : முனைவர்..பரசுராமன்
செயலாளர்                  : தோழர்.ஞானசேகர்
பொருளாளர்              : தோழர்.எஸ்.கோவிந்தராஜன்.

          புதிய நிர்வாகிகளுக்கு புதுவைப்பரணி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.












Friday, 26 December 2014

சென்னை கிருஷ்ணா கான சபாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

சென்னனை தி.நகர் கிருஷ்ணா கான சபாவின் காம கோடி ஹாலில் செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், செல்வி.திவ்யா ரமேஷ் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி 25.12.2014 அன்று மாலை நடைபெற்றது.  இவர்கள் இருவரும் புதுச்சேரி கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் சிஷ்யைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு திரு.வேல்முருகன், வயலின் திரு.ஸ்ரீனிவாசன், மிருதங்கம் திரு.அங்கப்பன்.  நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

















Sunday, 21 December 2014

ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு

ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு
        தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறை சார்பில் “ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் இசைப் போட்டிப் பரிசளிப்பு விழா 16.12.2014 மதியம் 3 மணிக்கு மொழிப்புலக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. அதில் நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்கம் :
முனைவர்.ம.திருமலை (மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) :
        திரைப்பட பாடல்கள் கர்நாடக இராகத்தை அடிப்படையாகக் கொண்டவை. நல்ல பாடல்கள் தாள ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவை.  சாருகேசி இராகத்தில் அமைந்த ‘முல்லை மலர் மேலே’ பாடலை இன்றும் பலரும் ரசிப்பதற்கு அது தான் காரணம்.
        இசை குறித்து ஆழ்ந்த புலமை பெற்றிருந்த ஆபிரகாம் பண்டிதர் ஒரு ஆசிரியர். அவர் நினைத்திருந்தால் தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆண்டு தோறும் இங்க்ரிமேண்ட் வாங்கிக் கொண்டு இருந்திருக்க முடியும்.  சித்த மருத்துவம் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட அவர் அதற்காக அதிக நேரம் செலவிட்டார்.  மலேசியாவிலிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.  பின்னர் இந்தியா திரும்பி இங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.  நான் சமீபத்தில் 12வது 5 ஆண்டு திட்டம் குறித்து படித்தேன். அதையொட்டி தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கிராமத்தை தத்து எடுக்க முடிவு செய்தேன். அவ்விழா ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும்.
        ஆபிரகாம் பண்டிதர் 1859யில் பிறந்தார். 1917ல் கருணாம்ருத சாகரம் நூலை வெளியிட்டார். “உன்னைச் சுற்றி எவ்வளவு குழப்பம் நடந்து கொண்டிருந்தாலும் உன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு முன்னேறு” என்பது தான் அவர் வாழ்க்கை கூறும் பாடம்.  பாரதியார் குறித்து கனகலிங்கம் எழுதிய நூலை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஜனவரியில் வெளியிட உள்ளது. கனகலிங்கம் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டவர். அவரது வாரிசைக் கொண்டு அந்த நூலை வெளியிட வேண்டும் என்பது எங்களின் ஆசை.  விளம்பரமும் கொடுத்தோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. உங்களுக்கு யாரையாவது தெரியும் என்றால் பதிவாளரிடம் தெரிவியுங்கள்.  இசைத் துறை நல்ல எதிர்காலம் உள்ள துறை. எனவே அதைக் கற்க பலரும் முன் வரவேண்டும்.
“ஆபிரகாம் பண்டிதரும், தமிழிசையும்”
பொறியாளர். சு.கோவிந்தராசன், தஞ்சாவூர்
        ஆபிரகாம் பண்டிதர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர்.  தனது சங்கீதம் குறித்த ஆய்வு பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக நூலாகக் கொண்டு வந்தார்.  எடுத்த முடிவை எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற குணம் கொண்டவர் ஆபிரகாம் பண்டிதர்.
        அவர் ஒரு சிறந்த சித்த மருத்துவர். கோரோசனை மாத்திரைகளை சுயமாக தயாரித்து கருவுற்ற பெண்களுக்கு வழங்கினார். மூலிகைப் பண்ணை நடத்தி வந்தார்.  அவரது சித்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அவரது கணக்கில் வரவு செலவு பார்ப்பதற்கு சிரமப்பட்டு, பின்னை தஞ்சாவூர் தபால் நிலையத்தில் ஆபிரகாம் பண்டிதர் கவுண்டர் என்பது திறக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தோடு சிந்திக்கத் தெரிந்த ஆன்மீகவாதி. 100 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்றும் மறுக்கப்படவில்லை. ஆபிரகாம் பண்டிதர் 6 முறை தஞ்சாவூரில் அகில இந்திய அளவில் இசை குறித்த கருத்தரங்குகளை நடத்தினார்கள். அதில் அகில இந்திய அளவிலிருந்து பல மன்னர்கள், வித்வான்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் தனக்கேற்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயற்சித்தார்.  தமிழகம், இந்தியா முழுமை மற்றும் ஐரோப்பிய அளவில் உள்ள இசை அறிஞர்களுக்கு தனது ஐயப்பாட்டினைக் கேட்டார்.  யாரும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். அந்த மாநாடுகளை நடத்திய அமைப்பு தஞ்சாவூர் சங்கீத வித்யாஜன சங்கம்.  அதில் பல்வேறு தலைப்புகளில் விவாத மேடை நடைபெறும்.  தமிழ்ப் பஞ்சாயது, கணிதப் பஞ்சாயத்து. விவாத மேடைகளுக்கு தலைவராக பட்டாச்சார்யா அவர்களும் உதவியாளராக வேம்பு அவர்களும் இருந்திருக்கின்றார்கள்.  இந்த நிகழ்வுகளுக்கு அவருக்கு பூண்டி அப்பாசாமி வாண்டையார் அவர்களும், உதவிக்கு பிச்சமுத்து அவர்களும் இருந்திருக்கின்றார்கள். தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காக இரண்டு வீணைகளைச் செய்தார். தந்திகளை இயற்பியல் விதிப்படி அமைத்தார். நரம்பினைத் தட்டினால் இரண்டு பக்கமும் இசை வரும்.  24 சுரங்களை மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தார். பரோடா மாநாட்டிலே மகன்களை வாசிக்கச் செய்தார்.  மாதவ ராவ் சொன்னார் “இசை குறித்த சர்ச்சை ஓய்ந்தது”
        ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதி திரு.டி.வி.சேஷகிரி ஐயர் சொன்னார் “தமிழ் இசை பற்றிய இந்நூல் தமிழனின் வரலாற்றையும் பேசுகிறது”.  கடல்கோல் என்றறியப்படும் சுனாமி திருச்செந்தூரிலிருந்து பல பகுதிகளையும், இராமேஸ்வரத்திலிருந்து பல பகுதிகளையும் வெட்டி எடுத்துச் சென்று விட்டது. இதனை லெமூரியா கண்டம் என்பார்கள் வெளிநாட்டினர். குமரிக்கண்டம் என்பார் தேவநேயப் பாவாணர். மடகாஸ்கர் தீவில் காணப்படும் பாபோப் என்றழைக்கபடும் மரம் தஞ்சாவூரில் உள்ளது.  ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் கடவுள் பெயர் “மாரி”. வாய்க்கரிசி போடும் பழக்கமும் உள்ளது.
        நைஜீரியாவில் பல கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பஞ்சாபில் உள்ள 400 கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்.  ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடியினர் குறித்த நூல் ஒன்றினைப் படித்தேன். ஆஸ்திரேலியாவில் கொரமண்டல் காடு உள்ளது. கொரமண்டல் என்றால் சோழ மண்டலை என்று பொருள்.  இராஜராஜ சோழன் வெற்றி கொண்ட பல நாடுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.  தமிழகம் எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது என்பதற்கு இதுவெல்லாம் சாட்சிகள். 
        குரல் வளையிலிருந்து வெளி வரும் ஒலியை பகுத்துப் பகுத்துப் பார்த்துக்கொண்டே சென்றால் ஒவ்வொரு கூட்டத்தின் ஒலியும் மாறுபடு. இயக்கு மற்றும் சுருதி கணக்கில் அடங்காதது.

        தொகுப்பு ; லெனின்பாரதி




Saturday, 29 November 2014

இனிமையான நேரங்கள் ..
ஒரு புறம் நடுங்க வைக்கும் குளிர் .. மறுபுரம் தொடர்ந்து இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் மழை .. இப்படிப்பட்ட இந்த காலத்தில் நேற்று மாலை (29.11.2014) ஆரோவில் யூனிட்டி ஹாலில் ஒரு சுவையான நடன நிகழ்ச்சி .. செல்வி.கிருத்திகா இரவிச்சந்திரன் அவர்களின் பரதநாட்டியம், திருமதி.தேஜஸ் (ஆரோவில்) மற்றும் செல்வி.அஸ்வினி (பெங்களூரு) ஆகியோரின் ஒடிசி நடன நிகழ்ச்சி.












குறைவான பார்வையாளர்களோடு நடைபெற்றது. மொத்தம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. நடன அசைவுகளும், அரங்க அமைப்பும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தன ..கருத்துக்களை பகிருங்கள் ..