Friday, 6 November 2015

புதுச்சேரி அரசின் வருமானம் உயர்வு . தலைமைச் செயலர் தகவல்


புதுச்சேரியின் வருமானம் உயர்ந்திருப்பதாக தலைமைச் செயலர் தெரிவித்திருக்கிறார். சந்தோசமான செய்தி. அனைத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக பரிசீலித்து நல்ல முடிவுகள் எடுத்து இலாப நோக்கோடு செயல்பாடுகள் அமைந்திட வழிவகைகள் காணட்டும். வாழ்த்துக்கள்.

Friday, 30 October 2015

புதுச்சேரியில் தி ஹிந்து நாளிதழ் 3ம் ஆண்டு தொடக்க விழா

தமிழ் கூறும் நல்லுலகில் உண்மை பேசும், தமிழனை ஒரு படி உயர்த்திச் செல்லும் ஒரு பத்திரிக்கை இல்லையே என்கிற ஒரு குறையை ஓரளவுக்கு தீர்த்து வைத்துவரும் பத்திரிக்கை "தி ஹிந்து" (தமிழ்) .. தி ஹிந்து இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் காலடி வைத்திருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அறிஞர் பெருமக்களை அழைத்து பேச வைத்து அழகு பார்க்கிறது. நாளை புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கம்பன் கலையரங்கில் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், நடிகர்.பார்த்திபன், எழுத்தாளர்.ஆயிஷா நடராஜன், நாடக இயக்குநர். வேலு சரவணன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்புறம் நானும் நீங்களும். மேலும் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள பல்வேறு புத்தங்கங்களும் கிடைக்கும். தீபாவளி மலரும் கிடைக்கும். மதியம் உணவும் உண்டு என்று சொல்லி இருக்கிறார்கள். நாளைய காலைப் பொழுதை நமக்காக குரல் கொடுக்கும் ஹிந்துவுக்காக ஒதுக்குவோம்.


Tuesday, 13 October 2015

அறிவுச்சுரங்கம் முனைவர் த.பரசுராமன் மறைவு - அஞ்சலி

அறிவுச்சுரங்கம் முனைவர் த.பரசுராமன் மறைவு - அஞ்சலி
      புதுவைப்பரணி இருமாத இலக்கிய இதழின் துணை ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி மாவட்டத் தலைவரும், புதுவை அறிவியல் இயக்கத்தின் நிர்வாகியும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முனவருமாகிய அருமை நண்பர் தோழர்.முனைவர் த.பரசுராமன் இன்று 14.10.2015 - புதங்கிழமை காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவுச்சுரங்கம் முனைவர்.த.பரசுராமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாததாகும். அவரின் இடத்தில் இன்னொருவரை பொருத்திப் பார்க்கக் கூட முடியவில்லை. தமிழை உலகிற்கெல்லாம் கொண்டு சென்றவர். பல ஆளுநர்களுக்கும், வடநாட்டுக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர். புதுவைப்பரணியின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர். இனி இது போல ஒரு நண்பரை தோழரை எங்கு காண்பேன் .... ?








Wednesday, 16 September 2015

இயற்கையோடு விளையாடிய சூரியக் கதிர் ..திருவிளையாட்டு

இன்று 16.09.2015 மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய போது மழை வருவது போல இருந்தது. ஒரு நிமிடம் தான் . பருவநிலை மாறியது. சூரியனின் கதிர்கள் தங்களின் நிறங்களை மாற்றி தாகூர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் மரங்களின் மீது பட்டுத் தெறித்தது. ரம்மியமான காட்சி. என்னே இயற்கையின் விளையாட்டு .. ரசித்து மகிழ்ந்தேன்.



Sunday, 6 September 2015

ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமியின் இசைக் கச்சேரி -

இன்று (06.09.2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் ஒரு இசைக்கச்சேரியை அழைப்பின் பேரில் புதுச்சேரி அரவிந்தர் வீதியிலுள்ள பரத கலாமண்டலத்தில் பார்க்க நேர்ந்தது.
ஒரு இசைக்கச்சேரி - ஸ்ரீவில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமி பாட்டுக்கு கோயமுத்தூர் எஸ்.உஷா வயலின் இசைக்க மிருதங்கம் வித்வான் எஸ்.கோவிந்தராஜன். தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கப்படும்படியாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கசக்கி பிழியும் கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி மனதுக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டக் கூடியதாகவும் இருந்தது.
அரங்க மேடை அமைப்பும், ஒலி, ஒளி அமைப்பும் மிகவும் பிரமாதம்.
இது போல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்கிற தகவலை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். அது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து செயல்படட்டும்.
பல கலைஞர்கள் பாராட்டை மிகவும் விரும்புகிறார்கள். தங்கள் திறமை திசையெட்டும் பரவ வேண்டும் ஆசைப்படுகிறார்கள். இது நியாயமானதும் கூட. ஏனென்றால் பாராட்டுக்கள் தான் அவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு.
வாழ்த்துக்கள் தொடரட்டும் திருமதி.கே.விஜயலட்சுமி குழுவினரின் வெற்றிப்பயணம் ...





Wednesday, 2 September 2015

மாறாத புதுச்சேரி தலைமை தபால் நிலையம்

புதுச்சேரி அரசு புதுச்சேரியை இனி 'புதுச்சேரி' என்று அழைக்க வேண்டுமெனவும், அரசு கடிதங்களிலும் புதுச்சேரி என்று தான் எழுத வேண்டுமென உத்திரவு பிறப்பித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. என்ன காரணமோ தெரியவில்லை புதுச்சேரி தலைமை தபால் நிலைய மட்டும் பாண்டிச்சேரியையே பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பெயர் மாற்றத்தில் புதுச்சேரி தபால் நிலைய அதிகாரிகளுக்கு உடன்பாடு இல்லையோ ?

Tuesday, 21 July 2015

கலை இலக்கியத் திருவிழா - 26.07.2015 - த.மு.எ.க.ச ...

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி சார்பில் கலை இலக்கியத் திருவிழா வருகிற 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள பாக்யா திருமண நிலையம் அருகில் (முத்தரையர்பாளையம்) அருகில் நடைபெற உள்ளது. திரு.பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு "கல்வி மெய்ப்பட வேண்டும்" என்கிற தலைப்பில் உரைவீச்சும் சிறப்பு விருந்தினராக எடிட்டர் பீ.லெனின் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். விழாவில் புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி தர்பார், லிம்போ கேசவனின் தீப்பிழம்பு ஆட்டம்,  திருநங்கையர் வழங்கும் கரகாட்டம் என கலகலக்கப் போகிறது. விரிவான அழைப்பிதழைக் காண puduvaipparani.blogspot.in வருக ...