அதேபோல வங்காளதேசத்தைச் சேர்ந்த
Taslima Nasreen என்ற பெண்மணியினுடைய “Lajja” (லஜ் ஜை) என்ற புத்தகத்தையும் தடைசெய்தனர். ஒரு சமயக் குழுவிற்கு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே தடைசெய் என்கிறார்கள். அதற்குப் பணிந்து போக இங்கே ஒரு அரசு இருக்கிறது. அது மத்திய அரசாகவோ அல்லது மாநில அரசாகவோ இருக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின்படி மதசார்பற்ற அரசு என்று சொன்னாலும் மதசார்பற்ற என்ற வார்த்தைக்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. அதனால்தான் இது போன்ற புத்தகங்களைக் மதவாதிகளுக்கு ஆதரவாக தடைசெய்யும் போக்கு நிலவுகிறது.
புத்தகங்களுக்கு மட்டும்தானா தடை? உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசைன் அவர்கள் வரைந்த ஓவியங்கள்கூட சில மதவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர் இந்நாட்டை விட்டு விரட்டப்பட்டார். ஒரு இந்தியக் குடிமகனே இந்தியாவில் இருக்க முடியாமல் வேறொரு நாட்டில் தஞ்சம் புகக்கூடிய சூழல்தான் இங்குள்ளது. இது தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வுகளில்லை. இங்கிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்ற அயர்லாந்தில் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவருக்கு குழந்தை பிறக்க வேண்டிய நிலை.
குழந்தை பிறந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடு மென்ற சூழலில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறார். மருத்துவர்கள் தாயைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் மௌனமாக இருந்து விட்டனர்.
அந்தத் தாயும் இறந்து விடுகிறார். அயர்லாந்து மிகவும் முன்னேறிய ஒரு நாடு. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உணர்ச்சிகரமான கோஷங்களைக் கொடுத்த நாடு. அங்கே இந்திய வம்சாவளி பெண் இறந்து விட்டாள் என்றால் அதற்கு காரணம் அங்கேயுள்ள மத நம்பிக்கைதான். குழந்தையைக் கொல்லக் கூடாது. கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டம் அனுமதிக்காது. அயர்லாந்து போன்ற ஒரு முன்னேறிய நாட்டில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் மருத்துவர்களுக்கு தமது கடமையையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியான காரணத்தினாலல்ல. அது மத சம்பந்தமான காரணத்தினாலென்று புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் கொடுத்த உயிரை மனிதன் பறித்துக் கொள்ளக் கூடாது என்ற மதவாதத்தின் அடிப்படையில்தான் அங்கே ஒரு இந்தியத்தாய் மரணிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற எழுச்சியினால் அந்நாட்டு சட்டம் திருத்தப் பட்டது. மருத்துவர்கள் தீர்மானித்தால் கருக்கலைப்பு செய்து தாயைக் காப்பாற்றலாம் என்ற புதிய சட்டவிதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது.
இன்றும் மத ரீதியான, பகுத்தறிவிற்கு ஒவ்வாத செயல்கள் நடைபெற்று வருவதை நாம் பார்த்து வருகிறோம். நான் மாணவ பருவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபொழுது அதன் தலைவர்களில் ஒருவராக வி.பி.சிந்தன் இருந்தார். அவர் தாய்மொழி மலையாள மென்றாலும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் வடமொழிச் சேவையை ஆரம்பித்து வடமொழி தெரிந்தவர்களை அழைத்து பேச வைப்பார்கள். அப்படிப் பேசியவர்களில் பெருபான்மையானவர்களின் பேச்சு கடவுள், மதம் சார்ந்த பேச்சாகவேயிருக்கும்.
வி.பி.சிந்தனுக்கும் வடமொழி தெரியுமென்று பேச அழைத்த போது அவருடைய பேச்சின் சுருக்கத்தை எழுதிக்கொடுக்கக் கூறினார்கள். பின்னர் அவற்றைப் படித்துப் பார்த்து தணிக்கை செய்வார்கள். இது வெளியில் யாருக்கும் தெரியாது. கருத்துக்களை அரசு நிறுவனங்கள் தணிக்கை செய்துதான் அனுமதிக்குமென்ற செய்தி எங்களுக்குப் புதிது. வடமொழியில் கடவுள் ஸ்லோகங் களைத்தான் சொல்லக்கேட்டிருக்கிறோம். வடமொழியிலும் நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியுமென்று வி.பி.சி. நம்பினார். புத்தருடைய லோகாயுத இக்கருத்துக்களைச் சொல்ல விரும்பி னார். ஆனால் அவரது பேச்சு சுருக்கத்தைப் படித்த வானொலி நிலையத்தார் இம்மாதிரி கருத்துக்களைச் சொல்ல வடமொழி சேவை ஆற்றவில்லையென்றும் பொருள் முதல்வாதம் பற்றி பேச அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
உயிரியல் பாடம் எடுத்துப் படிக்கும்பொழுது, உயிரின் தோற் றத்தைப் பற்றி கூறும்போது டார்வினுடைய பரிணாம வளர்ச்சி பற்றி கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி தத்துவம் பற்றி
1956ஆம் வருடம் வரை அமெரிக்காவில் கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்க முடியாது. ஏனெனில், பரிணாம வளர்ச்சியைப் பற்றி கற்பித்தால் உலகமே இறைவனுடைய படைப்பு என்ற கிறித்துவ மத நம்பிக்கை அடிபட்டுப் போகும்.
No comments:
Post a Comment