அவரது நடவடிக்கை ஒரு மோசடி செயலென்று சொல்லி மறுபடியும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டார். மூன்றாம் முறையாக நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற அவர், அவரது பகுத்தறிவு தோழர்களுடன் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் செல்ல முயன்றதை காவல்துறையினர் தடுத்ததில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னரே இங்கிலாந்து பாராளுமன்றம் சத்தியத்தின் பெயராலும் உறுதி மொழி எடுத்துக்கொள்ள அனுமதித்தது. இதுதான் 120
வருடத்திற்கு முந்தைய இங்கிலாந்தின் நிலைமை.
சார்லஸ் பிராட்லாவிற்கு உதவியவர்தான் அன்னிபெசன்ட். அவருடைய எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார். அதற்காக அவர் கொடுத்த விலை மிகவும் அதிகம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு மிகச்சிறந்த காங்கிரஸ் பேச்சாள ராகவும், சமூக சேவகியாகவும் செயல்பட்ட அன்னிபெசன்ட்டின் வாழ்க்கை ஒரு கண்ணீர் கதை. அவரது நடவடிக்கைகளைப் பிடிக்காத கணவர் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அன்னிபெசன்ட், தனது மகளை தன்னுடன் வைத்து வளர்த்து வர அனுமதி பெற்றார்.
அதன் பின்னர் மக்கட்தொகைப் பெருக்கத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றிய மால்தூஸ் என்பவருடைய மக்கட் பெருக்கத்தைப் பற்றிய தத்துவத்தால் கவரப்பட்டு அதை துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டு, அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் விநியோகம் செய்தார். அளவான குடும்பமிருந்தால் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
இதைக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் என்றும் கிறித்துவ சமயக் கருத்துக்களுக்கு விரோதியென்றும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் அவர் தண்டிக்கவும் பட்டார். அப்போது இங்கிலாந்தில் “இறை மறுப்பு”(Blasphemy)
ஒரு கிரிமினல் குற்றமாக இருந்தது.
இதன் பிறகு விவாகரத்து பெற்ற அவரது கணவர் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். கிறித்துவ மத விரோதியான அன்னி பெசன்ட் தனது மகளை வளர்ப்பதற்கு தகுதியற்றவர் என்று வாதாடினார். இங்கிலாந்து நீதிமன்றம் தாயிடம் வளர்ந்து வந்த பெண்ணை பலவந்தமாக பிரித்து கணவரிடம் ஒப்படைத்தது. இத்தகைய சூழலில்தான் அன்னிபெசன்ட் அம்மையார், சார்லஸ் பிராட்லா, பகுத்தறிவு சங்கம் மற்றும் மால்தூசியன் சங்கத்தினருடைய கருத்துக்கள் மிக்க செல்வாக்கு பெற்ற தாக்கத்தால் தமிழ்நாட்டிலும் அது எதிரொலித்தது. அதன் விளைவாகத்தான் இப்புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
பிரிட்டிஷ் இந்தியாவும் ஒரு மத சார்பற்ற அரசாகத்தான் இருந்தது. ஆகவே
1860ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய தண்டனை சட்டத்தில் “இறை மறுப்பு”( Blasphemy) ஒரு குற்றமாக்கப்படவில்லை. ஆனால் இரு மதத்திற்கிடையே துவேஷம் உண்டாக்குபவர்களைத் தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடமிருந்தது. இருப்பினும் மதத்தை வெறுப்பவர்களுக்கும் இடமிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சார்லஸ் பிராட்லா, மால்தூசியன் சங்கம் என்று பலரும் செயல்படக்கூடிய சூழல் இங்கிருந்தது.
அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வடலூர் இராமலிங்க அடிகள் உருவமற்ற கடவுளைப் பற்றி பேச முடிந்தது. அவருடைய கருத்துக்களை எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழ் சைவர்கள் எதிர்ப் பிரச்சாரமும் செய்ததில் விளைந்ததே அருட்பா -மருட்பா விவாதங்கள். இவ்வாறு மதங்கள் குறித்து கருத்துக்களைச் சொல்ல இங்கே ஒரு மேடை இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது இந்தியாவிற்கென்று அரச மதம் உண்டா என்ற கேள்வி எழுந்தபோது, நம் நாடு ஒரு மதசார்பற்ற குடியரசாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நம் நாட்டைச் சுற்றி யுள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பர்மா ஆகிய நாடுகளிலெல்லாம் அரச மதங்கள் உள்ளன. அங்கு அரச மதங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய முடியாது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவர். எனவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி நாம் பெருமைப் பட வேண்டும்.
No comments:
Post a Comment