“ஸ்கோப்”(Scope)
என்ற ஆசிரிய தம்பதியினர் பள்ளிக் கூடத்தில் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கற்பித்ததற்காக சிறையிலிடப்பட்டனர். பின்னர் அவர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களில் பரிணாம வளர்ச்சியை ஒரு கொள்கையாக சொல்லிக்கொடுக்கத் தடையாகவுள்ளது.
தாவரவியல் பட்டப்படிப்பில் இறுதியாண்டில் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர் ஒரு கிறித்துவர். எங்கள் வகுப்பிலே கடவுளின் படைப்புத் தத்துவத்தை நம்புபவர்கள் எவ்வளவு பேர்? டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை நம்புபவர் எவ்வளவு பேரென்று கேட்ட பொழுது 35 மாணவர்களிருந்த அவ்வகுப்பில் நான் ஒருவன் மட்டுமே பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புவதாக கூற நேர்ந்தது. ஒருபுறம் அறிவியலைச் சொல்லிக் கொடுத்தாலும் பெரும்பான்மையான மாணவர்களுக்கும், சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் விஞ்ஞானத்தின் மேல் முழு நம்பிக்கை இல்லாத சூழலில் விஞ்ஞானம் எப்படி வளரும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நீதிபதியாக பதவியேற்கும்பொழுது அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையிலுள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுத்துக்கொள்வதென்பது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும். அவ்வுறுதி மொழியை எடுத்துக்கொள்ளும்பொழுது ‘உளமார’
(solemnly), (அ) ‘கடவுள் மீது ஆணையாக’ என்று இருவிதமாகச் சொல்ல வாய்ப்புண்டு. அரசியலமைப்புச் சட்டம்
1950இல் அமுலுக்கு வந்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘உளமார’ என்று சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நீதிபதிகள் இதுவரை நான்கு பேர்கள் மட்டுமே. இந்த உறுதிமொழியில் ‘உளமார’ என்று சொல்லும் வாய்ப்பின்றி ‘கடவுள் மீது ஆணையாக’ மட்டுமே உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால் அந்த நான்கு பேர் நீதிபதிகளாகியிருக்க முடியாது.
உறுதிமொழி எடுத்துக்கொள்வது பற்றி உலகம் முழுவதும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுண்டு. ‘தனித் திராவிட நாடு’ வேண்டுமென்று கோரி வந்த தி.மு.க.,
1963ஆம் ஆண்டிலிருந்து அக்கோரிக்கையை கைவிட்டதோடு மட்டுமல்லாமல், ‘தனித் திராவிட நாடு’ என்பது எமது லட்சியம் மட்டுமே; பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை என்று கூறிவிட்டது.
அதற்குக் காரணம் மேற்சொன்ன உறுதிமொழியில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்கள். இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதன் இறையாண்மையையும் ஒருமைபாட்டை யும் பாதுகாப்பேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழி திருத்தப்பட்டது. அதன்பின் அவ்வுறுதிமொழியை எடுத்துக்கொண்டாலன்றி சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத் திற்கும் செல்லமுடியாது.
இலௌகிக சங்கத்தின் கட்டுரை வெளியீடுகள் நடக்கக்கூடிய அதே காலகட்டத்தில்(1890)
முடியாட்சியுள்ள இங்கிலாந்தின் தேசிய கீதம் ‘இராணியாரைக் கடவுள் காப்பாற்றட்டும்’(God
save the Queen) என்று தொடங்கும். மேலும், அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ‘கடவுளின் ஆணையாக’ என்று மட்டுமே தொடங்கும். இச் சூழலில் அந்நாட்டில் சார்லஸ் பிராட்லா என்ற ஒரு பகுத்தறிவு வாதி இருந்தார். அவருடைய கருத்துக்களை தமிழிலே மொழி பெயர்த்து வெளியிட்ட கட்டுரைகள்தான் இப்புத்தகங்களின் தொகுப்பிலுள்ளது. நார்த்தாம்டன் என்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் கடவுளின் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவர் மன்றத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.
மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சார்லஸ் பிராட்லாவிடம் அவரது நண்பர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடமைக்காக அவ்வுறுதிமொழியை எடுத்துக் கொள்ள வலியுறுத்தினர். மீண்டுமொரு தேர்தலைத் தவிர்க்க எண்ணிய அவரும் கடவுள் மீது ஆணையாக உறுதிமொழி எடுத்துக்கொள்ள ஒத்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்குச் சென்றார். அவர் இறை நம்பிக்கை இல்லாதவரானதால் அவரை மன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள அனுமதிக்க வில்லை.
No comments:
Post a Comment