இசுலாமியர் அல்லது கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அம்மதங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்வது கடினம். ஆனால் இங்கு இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்ப இட முண்டு. ஏனென்றால் இந்து சமயவாதிகள் எல்லா கருத்துக்களை யும் தம் மதத்திற்குள் சேர்த்துக் கொள்ள பெருமைப்படுபவர்.
சைவ நாயன்மார்கள் 63 பேரில் சாக்கிய நாயன்மாரும் ஒருவர். அவர் தினசரி சிவலிங்கத்தைக் கல்லால் அடிப்பார். அவரையும் ஒரு நாயன்மாராக ஏற்றுக் கொண்டனர். அவரைப் பற்றி திருத்தொண்டத்தொகை இவ்வாறு கூறுகிறது:-
“வார்கொண்ட வனமுலையாள்
உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு அடியேன்”
மேலும் திருச்சங்க மங்கை அவரை இப்படி வருணிக்கிறது.
“கல்லெறிவார் துவராடைப் படம்புனைவேடந்தவிரார்”
ஆகவே இந்து மதம், மதத்தை வெறுப்பவர்களையும், விரோதி களாகப் பார்ப்பவர்களையும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறது. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன் சைவ மதம், வைணவ மதம் என்றே இரு பிரிவுகளிருந்தன. இந்து மதம் என்ற சொல் அன்றைக்கில்லை. இவ்விரு மதங்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என்கிறார்கள். உண்மை என்னவென்றால் அப்பொழுது மிகப்பெரிய அளவில் சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். சமணர் பள்ளிகள் உடைக்கப் பட்டு சமண நூல்களும் தீயிடப்பட்டன. இவைதான் அன்றைய சகிப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
மதுரையருகே வைகையாற்றின் கரையோரம் திருவேடகம் என்றொரு ஊருண்டு. சமண நூல்களையெல்லாம் ஆற்றில் போட்டு மூழ்கடித்த வரலாற்றின் நினைவுச் சின்னம் அந்த ஊர். ஒரு சமயம் இன்னொரு சமயத்தை அழித்துதான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்தது. மதத்தையும் கடவுளையும் வெறுப்பவர்களைக் கூட உள்வாங்கிக் கொள்ளும் போக்கு இங்குள்ளது. இல்லா விட்டால் கண்ணதாசன் எழுதிய சினிமா பாடல் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்காது.
“தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
(2)
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை.”
மேலை நாட்டிலே “மத சார்பின்மை” என்றால் “A
State is divorced from Religion”, அதாவது மதத்தை தள்ளி வைத்த அரசு என்று சொல்வார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அதை புரிந்துகொண்டிருப்பது வேறொரு அர்த்தத்தில்.
1990இல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைவர் தீபாவளியையட்டி அனுப்பிய வாழ்த்து அட்டை பற்றிய வழக்கொன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வட்டையில் ஓம் என்ற எழுத்துடன் காயத்ரி மந்திரம் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் பொன்னப்பா என்ற அதன் தலைவர் அம்மந்திரத்தை அனைவரும் அனுதினமும் உச்சரிக்க வேண்டுமெனக் கேட்டு கையெழுத்திட் டிருந்தார்.
அனைத்து சமயத்தினரும் தங்களது மோட்டார் வாகனங்களுக்கு கட்டாய இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய ஒரு நிறுவனத்தின் தலைவர் அரசு செலவில் ஒரு மதத்தைச் சார்ந்த கருத்தை பரப்பியது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் அவ்வாழ்த்து அட்டை களை அனுப்பியதற்கான செலவை அக்கம்பெனி தலைவர் எஸ்.ஆர்.பொம்மை உள்ளிட்டவரிடமிருந்து வசூலிக்க வேண்டு மென்று கோரப்பட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்து மத சார்பின்மை என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்தது. மத சார்பின்மை என்பது மதங்களுக்கு விரோதமானதல்ல, மாறாக அனைத்து மதங்களையும் அணைத்து செல்லும் அரசு என்று பொருள்படும். ஆனால் அத்தீர்ப்புக்கு சில மாதங்களுக்குப் பின் ஒன்பது நீதிபதிகளடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட் டுள்ள மத சார்பின்மை என்பது மதங்களைத் தள்ளி வைத்துள்ள அரசு என்று பொருள்படும் என்ற தீர்ப்பை வெளியிட்டது மகிழ்ச்சிக்குரியது.
No comments:
Post a Comment