(இடதுசாரி கருத்துநிலையாளர்கள், அதிகாரத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் செயல்படுவது அரிதிலும் அரிதான செயல். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தன்னை எந்தச் சக்தியும் வீழ்த்த முடியாது என்று நிரூபித்த மனிதராக வாழ்ந்துவரும் அரிய மனிதர் சந்துரு அவர்கள். மார்க்சிய கருத்து நிலை சார்ந்து தமது இளமைக்காலம் முதல் செயல்படும் மனிதநேயர். சென்னை இலௌகிக சங்கம், ஆறு தொகுதிகள் நூல்களை வெளியிட்டு ஆற்றிய இவ்வுரை பகுத்தறிவு என்ற கருத்துநிலையின் பல்பரி மாணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.)
“இந்நூலைப்பற்றிப் பேசும் போது சில விஷயங்கள் நினைவுக்கு வரவேண்டும். கடந்த மாதம் மராட்டிய மாநிலத்தில் “தபோல்கர்” என்ற ஒரு தத்துவ அறிஞர் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஏதோ கள்ளக் கடத்தல், கருப்பு சந்தையில் ஈடுபட்டவர் அல்ல. இந்நூலில் உள்ள பல கருத்துக்களை இன்றைக்கும் எதார்த்தத்தில் சொல்லிலும் செயலிலும் காட்டிய ஒரு சிந்தனாவாதி. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்பவர்களுக்கெல்லாம் காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட பதில்கள் அவர்களுடைய படுகொலைகள்தான். அவர்களைப் படுகொலை செய்து கல்லறையில் அடைத்து விட்டாலும் இப்படிப்பட்ட தத்துவ விசாரங்கள் எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன. இம்மாதிரியான கருத்துக்களை ஒடுக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இப்படிப்பட்ட புத்தகங்களின் மறுபதிப்புகள் வெளியிடப்படுகின்றன. பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு ஆகிய மும்முனைத் தாக்குதல்களையும் இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள காலதாமதங்கள் ஆகலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கருத்துக்களை சொல்லவும், எழுதவும், பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது என்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், இந்த மாதிரியான புத்தகங் களை விலைக்கு வாங்கி படிக்கக் கூடிய எழுத்தறிவு பெற்றவர்கள் அன்று மிகவும் குறைவு. இது போன்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்களும் அதிக எண்ணிக்கையிலில்லை. அதையும் மீறி இப்படிப்பட்ட கருத்துக்களை ஆணித்தரமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்த அறிவுஜீவிகள் குழாமொன்று சென்னையில் இருந்ததற்கு நாம் பெருமைபட வேண்டும்.
இந்நூல்களையெல்லாம் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் அழிந்து விடாமல் அதை மறுபதிப்பு செய்த வீ.அரசு நல்ல பணியை ஆற்றியிருக்கிறார். இத்தொகுப்பு ஒரு மறுபதிப்பு தானேயழிய புதிய புத்தகங்களல்ல. மாணவர்கள் இப்புத்தகங் களை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அதைப்பற்றிய தங்க ளுடைய கருத்துக்களை ஆழமாக பதிவதற்கு முன் வர வேண்டும். பழைய புத்தகங்கள்தானே என்று படித்ததோடு நிற்காமல், அச் சிந்தனைகளை மறுபதிப்பு செய்து அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இது போன்ற நிகழ்வுகள் பயன்படும். ஒரு நூற்றாண் டுக்கு முன்னரே இப்படிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதனால் சமுதாயம் மாறிவிட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் “தபோல்கர்” போன்ற சிந்தனாவாதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதற்கு நாம் அவமானப்படவேண்டும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதற்குக் காரணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமயவாதம் அல்லது சமயவெறி பிடித்தவர்களுடைய செயலாகவும் இருக்கலாம். கருத்து சுதந்திரம் என்பது இங்கு மறுக்கப்படுகிறது.
Salman Rushdie எழுதிய “The Satanic verses” என்ற நூலை இந்த நாட்டிலே தடைசெய்தார்கள். புத்தகத்தை வாசித்துவிட்டுதான் செய்தார்களா என்று தெரியவில்லை! அப்புத்தகம் ஒரு சமயத்திற்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி தடைசெய்தார்கள்.
No comments:
Post a Comment